Thursday 20 February 2014

சுடரே ஒளியே!

காலத்தின் சுடரே காணரும் விளக்கே காட்சியின் கருமுதலே
ஞாலத்தின் ஒளியே ஞாபகத் தாயே நானுன்னைக் காணேனோ
சீலத்தின் உருவே சிந்தனை வடிவே தீந்தமிழ் தருபவளே
கோலத்தை நானும் கண்ணொடுகாணும் காலமும் வாராதோ


நீலத்தில் தீயும் நெஞ்சத்தில் சூடும் நீயெனக் கண்டுகொண்டேன்
ஆலத்தில் சாவும் அன்னத்தில் வாழ்வும் ஆக்கி யளித்தவளே
சாலத்தில் பொய்மை சற்குணம் யாவும் வைத்தவள் நீயன்றோ
தூலத்தில் மென்மை தூரத்தில் தோற்றம் தேவிநீ கொண்டாயோ

காற்றொடு மூச்சாய் கண்ணிடை ஒளியாய் கற்பனையில் வாழ்வும்
தோற்பொதிஉள்ளே துன்பத்தின் தோற்றம் தந்தெமைச்செய்தாயே
சீற்றத்தில் ஆர்வம் செய்முறை தோல்வி சிறுமையில் உழலென்று
நாற்றத்தில் புரளும் நகைப்பினை கொள்ளும் நலிவையும் தந்ததென்ன

மாற்றத்து மூலம் மங்கையின் யௌவனம் மந்திரப் பொன்னழகு
வேற்றதன் ஆர்வம் வீறிட்ட போக்கு வித்திடச் செய்தவளும்
கூற்றுவன் கொள்ளக் குற்றத்தின் தீர்ப்பு கொள்கையும் செய்தளித்து
தேற்றலுமின்றித் தேகம் வதைப்பாய்  தீர்ப்புக்கள் இப்படியோ

சாற்றின் இனிமை சேரும் கரும்பாய் செய்துலகில் படைத்தாய்
ஊற்றெழும் உள்ள வெம்மை வெறுப்பு உள்ளத்தில் தோன்றவிட்டு
சேற்றினில் பூக்கும் செந்தாமரைபோல்  தேகத்தைச் செய்தவளும்
போற்செழும் பூவில் போதையை தந்தோர் போதில் கருகுவதேன்??

No comments:

Post a Comment