Tuesday 18 February 2014

நான்கு பெண்கள் (விடுகதை கவிதை) யார் இவர்கள்


ஆடுவாள் அசைவாள் ஆனந்தமாக 
ஆனாலும் அழகுபோகாள்
தேடுவாள் சிரிப்பாள் தென்றலில் மணப்பாள் 
தீந்தமிழ்ப் பாடலாவாள்
கூடுவாள் களிப்பாள் குழந்தைபோல் சேற்றில் 
கொண்டே கால் வைத்துநின்றாள்
வாடுவாள் ஒருவன் வந்தபின் சென்றால் 
வழிபார்த்து முகம் வாடுவாள்

அலைந்தவள் ஒருத்தி அசைகின்ற நளினm 
அகமென்றும் அமைதியற்றாள்
தேங்குவாள் திரிவாள் திசையென்று கொள்ளாள் 
தேடியும் ஏதும்காணாள்
ஒங்குவாள் விழுவாள் உயிர்போவதன்ன 
உறுமியே வெள்ளைமண்ணில்
தாங்கவே வீழ்ந்து தரைபுரண் டடங்கி 
தன்னகம் திரும்புவாளாம்
 
இல்லை யென்றாலும் இரவெல்லாம் வாடி 
இன்னுமோர் பெண்ணொருத்தி 
தொல்லையும் தந்து தொட்டவன் ஓடித்
தொலை சென்றபோது ஏனோ
அல்லதும் எண்ணி அனுதினம் நொந்து 
அரைமேனி ஆகிநிற்பாள்
வல்லமை கொண்டாள் வண்ணமோவட்ட 
வடிவெனும் திருமுகத்தாள்

நேரிலே வந்தாள் நெஞ்சோடு நிற்பாள் 
நல்லுயிர் காத்து நிற்பாள்
கார்காலம் தண்மை கடுவெயில் வெம்மை
காணும்தன் நிலைமாற்றுவாள்
பேரிலோ  இளையாள் பெரிதெனும் மனதால் 
பேசிடும் கதைகள்கூறி
தேர்போலும் அசைவாள் தெருவெங்கும் திரிவாள்
தேடும் நல் மணம்கொடுப்பாள்


1. தாமரை    2.அலை (கடல் அலை)  3 நிலவு   4.தென்றல் 

No comments:

Post a Comment