Thursday, 20 February 2014

யார் இடம் கொடுத்தது?

தென்றலுக்கு ஓடச்சொல்லி யார்விதித்தது - இந்தத்
தேன்நிலாவின் பொன்னிறத்தை யார் கொடுத்தது
நின்றுவீசும் பூமணத்தில் நெஞ்சம் கொள்ளவும் -வந்து
நீலவிண்ணின் பஞ்சுமேகம் நீரை ஊற்றவும்
குன்றின்மீது நீரெழுந்து கூடு ஆழ்திரை - மேவும்
கோலமாகடல் தனில்லென் றீது சொன்னவர்
மன்றம் மாபுரத்தில் நின்று மன்னன் ஆளென - இந்த
மண்பிரித்துச் சொந்தம்கொள்ள யார் விடுத்தது

சுட்டுவாழச் செய்யுமந்தச் சூரியன்களும் - அண்டம்
தூரத்தூர விண்ணிலாட யார் வகுத்தது
கட்டிவைத்தும் ஆட்டுமந்த காந்தசக்தியும் - அந்தக்
காரணத்தி லண்டமீது நிற்கும்பூமியும்
கொட்டித்தூறும் மின்னலோடு கூடுமாமழை - கோபம்
கொண்டதாக வீசுங் காற்றும் யார் படைத்தது
குட்டிப்பூனை ஆடுந்தோகை கூவும்பட்சியும் - மென்மை
கொண்டுசெய்யக் கொல்லுங்கூட்டம் ஏன்படைத்தது

முட்டிநீர் தெறிக்கும் ஆழி  மோகனத்தையும் - இன்னும்
மேகமீ தெழுந்தது போகும் மண்ணின் பட்சிகள்
புட்டிமண்ணும் பச்சைக்காடு பூக்கள் கொள்வனம் - நல்ல
புல்லிருக்கும் மேடைசெய்து பூமி தந்தவள்
வெட்டி வேலியிட்டு நாடுவேந்தன் என்குலம் - இன்னும்
வீதி எல்லை வைத்த சட்டம்  என்றுகூறிடும்
துட்டமா குணங்கள்கொள்ளக் கொள்கை செய்தளோ - இந்தக்
கோதையர் வதைபடுத்துங் கோலம் செய்ததார்

சட்டென்றோர் தினத்திலிந்தச் சுற்றும்பூமியும் - தன்னில்
சற்றுக் காணும் காந்தமென்னும் சக்தியை விடப்
பட்டமும் பணம்பொருட்க ளோடு காண்பவர் - இந்தப்
பூமியும் தன்சொந்தமென்று பங்குகொள்ளினும்
விட்டதால் இப்பூமிவிட்டு விண்குழிக்குள்ளே - ஆழம்
வீழ்வதன்றி வேறுமுண்டோ வேந்தர்தானதும்
கொட்டிவிட்ட குப்பையாவர் கொள்ளுமட்டுமே -இந்தக்
கோளமாம் நற் பூமிதன்னிற் கேடு செய்வரோ

No comments:

Post a Comment