Thursday 20 February 2014

உலவும் நிலவே ஓடிச்சொல்!!!

நேற்றிருந்தாய் இன்றில்லையேன் வெண்ணிலாவே - அந்த
நீலவெளி மேகத்திலே விண்ணுலாவியே
தோற்றி விட்டால் பொன்னிலங்கி மின்னிடுவாயே - இன்று
தேயவைத்து யார் மறைத்தார் கூறு நிலாவே
காற்றும் மேனி தொட்டுமாலை சென்றிடும் வேளை - நீயும்
காதலுளம் கனிய வைப்பாய் காண்பவர்மீதே
சாற்றுமொழி வார்த்தை கொண்டேன் பொன்னின் நிலாவே- இச்
சங்கதியை அங்கிருந்தே கேட்டிடுவாயே

வீற்றிருந்தார் மன்னர் குலம் செந்தமிழ்தானே - அன்று
வீடுமனை கோவில் கட்டித் தந்ததனாலே
நாற்று நட்டு நெல்லுடைத்துத் தின்றவர்வாழ்வு- அற்றை
நாளிலொரு சொர்க்கமென்றே கண்டது ஊரே
தூற்றிமக்கள் தீயழிக்க செய்தவர்யாரோ - அவர்
தெய்வத்தமிழ் கொல்ல மனம் தீதுகொண்டாரோ
ஏற்றி வைத்த தீபமெல்லாம் எங்கே நிலாவே - இங்கு
இருள்மிகுந்தே உயிரழிந்த தேது சொல்லாயோ

ஆற்றினிலே வெள்ளம்வரப் படகினில் நாமே - அதில்
அலையடிக்க இடையில்நின்று சுழன்றடித்தோமே
மாற்றமில்லை போகுந்திசை ஒன்றெனவாகி - நாம்
மனமெடுத்தே துடுப்பசைத்திட வேண்டும்நிலாவே
வேற்றுமையாய் நாம் நடந்திடில் பொன்னின்நிலாவே - நாம்
வீற்றிருப்பது கூற்றுவன் கரம் ஆகும் நிலாவே
சீற்றம்கொள்ளினும் ஈற்றில் ஒன்றிடு கொள்கைவிடாதே - நீ
சேர்ந்து நின்றிடு தீமைவென்றிடு விடிந்திடும்நாளே

No comments:

Post a Comment