Thursday 27 February 2014

கொட்டு முரசே!

பூமியில் யாவரும் ஒன்றென வாழ்வினைப்
பெற்றனர் கொட்டுமுரசே -இதில்
நாமதில் மூத்தவர் நம்மி லிளையவர்
பேதமில் கொட்டுமுரசே
வா மிதமாய் நமை எண்ணிடும் தீமைகள்
வெந்தன கொட்டுமுரசே இங்கு
நாமினி யாவரும் ஒன்றெனப் பாடியும்
ஆடுவர் கொட்டுமுரசே

தீமைஅகன்றிட தீங்கெழும் எண்ணங்கள்
தீய்ந்தன கொட்டுமுரசே -இனி
வாய்மை யுடைத்ததோர் வாழ்வு செழித்துமே
வாழென்று கொட்டுமுரசே
தேய்மனம் யாவிலும் தென்றல் வருடிட
தேறென கொட்டுமுரசே - அந்தத்
தெய்வமொன்றே பெரிதென்று முழங்கிட
தோமென்று கொட்டுமுரசே

சொல் தமிழானது சூரியனொத்தது
சொல்லி முழங்கு முரசே - இனி
வெல்லும் தமிழ் நல்ல வீரமெடுத்திடும்
வீறுடன் கொட்டுமுரசே
நல்ல மனங்களில் அன்பு உணர்வெழும்
நாளென்று கொட்டுமுரசே - இனி
நானல்ல நாமெனும் எண்ணம் பரவுதல்
நிச்சயம் கொட்டு முரசே

தேமதுரத் தமிழ்நாதம் பரவிடச்
செய்யெனக்கொட்டு முரசே நல்ல
மாமதயானை யின் தீரமெடுவென
மேவிஎழும் சத்தம்கொண்டே
பூமியதில் வெகு தொன்மொழியானது
பொங்கிட கொட்டுமுரசே -இனிப்
புன்னகையன்றி பொலிவதுவேறில்லை
போய்எழு கொட்டுமுரசே
— w

1 comment:

  1. /// நானல்ல நாமெனும் எண்ணம் பரவுதல் ///

    பல சிறப்பு வரிகள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete