Thursday 20 February 2014

முடிவில்லாக்கவிதை

முடிவில்லாக்கவிதை (மீண்டும் ஆரம்பத்திகு வரும்)

கொட்டும் மதுமலர் முற்றம் விரியக் கை
கொட்டியே ஆடுகிறேன் - அது
விட்டே இதழ்மொக்கு நெக்குவிடும் எழில்
வித்தையில் மெய்சிலிர்த்தேன் - பல
பட்டுவண்ண இதழ் பூமலர்வில் சிந்தும்
பொன்னிறத் தேனமுதைக் - கொண்டு
சித்தமதில் வருந் தீந்தமிழின் கவி
செய்து தினம் கொடுத்தேன்

சுற்றும் புவியிடைச்  சூழலிலும் அன்பு
தொட்டுக் கரமெடுத்தேன் - அதில்
மற்றும் மாலைவீசு மாருத மாயின்ப
மோனை எதுகை வைத்தேன் - நல்ல
சொற்பதமா யெழில் சேர்த்து மகிழ்வென்னும்
சோதிஒளி கொள்ளவும் - எனைச்
சற்றுமெதிர் கொள்ளா சக்தி தந்த உயிர்
சாரமிடையில் விட்டே

பற்றி எறிந்தன வீழ்மலர்கள் தனைப்
பூவன தென்றல் மழை - துளி
எற்றும் விதங் கொண்டும் என்னில்தெளிக்க.,நல்
இன்பந்தரும் சுவையில் - எனைச்
சுற்றிமலர்த் தருகொப்புலுக்கி அதை
தோளிடை வாகையென - ஏது
கொற்றவனோ இவன்மேலிறைக்கும் தென்றல்
கோலத்தினை ரசிக்கப்

புற்றரையிற் பனியோடியெழ அதைப்
புல்நுனி தான் திரட்டும் - வகை
நெற்றியடி யினில் வேர்வையெழ நங்கை .
நேர்விழி வேலெறிய பட்டுக்
குற்றமி ழைத்திடா கோமகனின் மனங்
கொண்டிடக் காயமிடும் - அந்த
வெற்றியின் அற்புதம் வேட்கை கொளுமவள்
வீறெழும் புத்துணர்வில்

கத்தும்குருவிகள் காகம் கிளியிசை
கானக் கரும்குயிலின் - பல
சத்தமிட்டேசொல்லும் சங்கதியில் மனம்
சார்ந்தே இசைபடிக்க
முத்தமிடும் மேகம் வானடியை அதோ
முன்னடிவான் கிழக்கில் - விடும்
ரத்தமெனச் சிவந்துள்ள முகிலிடை
ரத்தின பொற்கலயம்

வட்டப்பரிதியும்  நித்தமெழும் அண்ட
வண்ணக் குழம்புகளின் - வகை
இட்ட எழில்மேவு வான்பரப்பில் வெகு
எட்டமிருக்கும் சக்தி - அவள்
தொட்டு மனதினில் கொட்டியதை இவன்
சொல்லிக் கவிதையிட - எழிற்
பட்டு மலர்களில் பொற்கதிரோன் சுடும்
புத்தொளிச் செங்கதிரால்

கொட்டும் மதுமலர் முற்றம் விரியக் கை
கொட்டியே ஆடுகிறேன் - அது
விட்டும் இதழ்மொக்கு நெக்குவிடும் எழில்
வித்தையில் மெய்சிலிர்த்தேன்
..............................
......
...................................
(மீண்டும் முதலிலிருந்து தொடர்கிறது)

No comments:

Post a Comment