Saturday 1 June 2013

வேண்டாமென்றால் வினையேன்!


வேண்டாமென்றால் வினையேன் என்னை
விடு நீ பறந்திடுவேன்
தாண்டேன் உந்தன் தர்மக்கனலை
தாயே செய் வதையேன்
மாண்டான் என்றால் மாந்தர் உலகில்
மறந்தே வாழ்ந்திடுவர்
ஆண்டேன் மாதம் வைத்தே என்னை
ஆக்கும் வேதனை சொல்

தோண்டேன் குழியை தூங்கேன் என்றே
தேகம் எனும்பாரம்
கூண்டே விட்டுக் கொள்ளே னென்று
சொன்னேனா யானும்
நீண்டே காணும் பிரபஞ் சத்துள்
நிற்கும் தெய்வத் தீ
மீண்டான் என்றே மின்னல் சுடருள்
மெல்லக் கருவாக்கு!

நாண்டே நானும் நின்றேனா காண்
நல்லோர் கவியென்றே
பூண்டேன் வேடம்புனைந்தேன் கவிதைப்
பூக்கள் தனைத் தூவித்
தூண்டேன் எனிலும் தீபத் திரியாய்
தாயே தமிழ் செய்தேன்
சீண்டேன் நின்னை சிரித்தே யிருந்தேன்
சினமேன் கொண்டாய் சொல்

ஆண்டேன் என்றே அங்கே ஒருவன்
அழகுத் தமிழ்கொன்றான்
பூண்டேன் புல்லேன் புழுவேன் எல்லாம்
போவென் றுயிர் கொன்றான்
மூண்டேன் தீயை முழுதும் பரவ
முற்றும் கரியாக்க
நீண்டேன் துயரம் நெடுத்தே போக
நின்றாய் சொல் சக்தி

No comments:

Post a Comment