Tuesday 11 June 2013

இயற்கையின் காதலன்

நீலவிதானத்து மேகத்தில் பொற்துகள்
நாணிக் கண் கூசலென்ன - எழில்
கோலமுகத்துடை வெண்ணிலவு என்னைக்
கொஞ்சிக் களிக்கையிலே
காலமிட்ட விதி காற்றுவந்தே என்னைக்
கட்டித் தழுவுகையில் - இந்த
ஞாலமிட்ட சதி நள்ளிரவுக் குளிர்
நம்மைப் பிரிப்பதென்ன

ஆழியிட்ட அலை ஓடிவந்து என்னை
ஆசையுடன் தழுவி - சில
நாழிவிட்டு என்ன  ஆனதுவோ மனம்
நோகவிட் டோடலென்ன  
தோளைத் தொட்டு முகில் தூவும்மழை எனைத்
தொட்டு சுகம்மளிக்க - அந்த
வாளின் வெட்டு எனமின்னல்வந்து கொண்ட
வஞ்சம் பிரிப்பதென்ன

போம் வழியே எனைப்போற்றி மலர்தரு
பூக்கள் சொரிந்து நிற்க - ஒரு
பாம்புவந்தே நடுப் பாதைநின்று எனைப்
பார்த்து சினப்பதென்ன
தீம்பழங்கள் கிளை தூங்குவன எனைத்
தின்னென்று காத்திருக்க - ஒரு
பூம்பொதியாம் அணில் பொல்லா மனங்கொண்டு
போய்எச்சில் செய்வதென்ன

துள்ளும்கயல் பொழில் தூங்கும் மலர்தனைத்
தொட்டுத் திரியுமலை - இன்னும்
வெள்ளிமலை அதன் வீரமென்னும் திடம்
வைத்திருக்கும் கடுமை
தள்ளி முகில் நடைசெய்யும்வானின்வெளி
தங்கரத சுடரும் -பெரும்
கள்ளினை கொள்மலர் கன்னி இயற்கையின்
காதலன் நானேயன்றோ

No comments:

Post a Comment