Friday 14 June 2013

தமிழே! உயிர்த் தமிழே!!

இலைதொடும் மலர்விடும் தென்றலும் ஒரு
இமைதொடும் துயில்மறு விழிகளும் - விரி
வலையிடை பிடிபடுங் குளிரலை- இதழ்
விரியிதழ் மணம் கெடும் மலர்வனம் - உரு
கலையினும் எழிலறு கருங்குழல் -இனி
கனிகளை மறந்திடும் பறவைகள் - இவை
நிலைகொள்ளல் புவிதனில் நேரலாம் - உயிர்
நிறைதமிழ் உணர்வின்றி வாழ்வுமோ

மலைநதி வரும்வழி அணைகளும் - விண்
மதியொளி மறைத்திடுங் கார்முகில் - கற்
சிலையெனில் இழந்திடும் நடையெழில் - ஒளி
சிதறிடப் பிரிந்திடும் இலைபனி - தன்
குலைதனை இழந்திடு முதிர்கனி - மெய்
குவலயம் கொளுமெனில் எமதுடை - உயிர்க்
கலைதனும் எழுமியல் தமிழினி - ஓர்
கணம்தனும் பிரிவுண்டோ வாழ்வினி

தமிழெனில் எழில்தரு இளமலர் - தனில்
தருமது இனிதெனும் சுவைநிகர் - விரி
குமிழ் எழு அலைமுகம் தொடு மிளம் -உடல்
குலவுதென் றலின் சுகவருடலும் - உயர்
நிமிர்தரு நிழல் தருஞ் சோலைகள் - அதில்
நிறைகனி மணமெழக் குருவிகள் -கிளை
அமர்களியுற வரும் குரலொலி இவை
அமுதெனும் தமிழிசை பொழியுமே!

No comments:

Post a Comment