Friday 14 June 2013

விடிவுக்காக...

நீலத்திரைகள் ஆடும்கடலின் நெடிதோர் கரைமீது
கோலத் தரையின் முடிவை எண்ணி மணலில் கிடக்கின்றேன்
சேலை மாதர் சிறுவர் குழந்தை சிரித்தார் கரையெங்கும்
மாலை வானச் சூரியன் போலும் மறைந்தே போனதெங்கே

யாரைக்கேட்பது யாரிடம்சொல்வது யாரை நம்புவதோ
நீரை நிலமும் நெடுவான் பரப்பை நெஞ்சில் பூசித்தோர்
ஊரைக் காத்து உண்மை போற்றி உலகை நேசித்தோர்
வேரைக்காணா வீழும் மரமாய் வீழ்ந்தார் எதனாலே

தூரத்தெரியும் அடிவானத்தில் தோன்றும் நட்சத்திரம்
ஓரம் நின்றே என்போல் நெஞ்சம் ஏங்கித் துடிப்பதுவோ
சூரத்தனமும் போனால் காணும் சூன்யம் இதுவென்று
நேரத்தனையும் எங்கும் இன்பம் நெகிழ கிடக்கின்றேன்

வந்தார் நின்றார் கொண்டார்  போனார் வாசல் கதவாலே
செந்தீ கொண்டார் கொன்றார்  உலகம் சிறுமைப் பட்டதிலே
நொந்தோர் தம்மை நேர்மைகொண்டே நிலைவிட் டுதவாமல்
சிந்தும் குருதி தெரியா வண்ணம் சொல்லி விஷமீந்தார்

இந்தப் பெரிதோர் உலகும் சுழலும் பொய்மைவழிநின்று
வந்தே விதியும் வாயை மூடி ஒட்டும் பசைகொண்டு
சிந்தும் உதிரம் செவ்வானத்தில் செழுமை நிறங் கொள்ள
அந்தோ வானச் சூரியன் உதயம் கண்டால் விடிவுண்டு

No comments:

Post a Comment