Friday 14 June 2013

கவிதை போர்

காட்டு மலர்களும் பூத்திருக்க - அந்தக்
கானகத்தில் இளம் மாலையிலே
கூட்டி மணம் கொள்ளும் காற்றுவர -  அதன்
கூட இசையொன்று கேட்டிருந்தேன்
நீட்டிப் பரந்திட்ட வானத்திலே - எந்தன்
நெஞ்சுக் குதிரையை ஓடவிட்டேன்
பாட்டுப் பிறந்தது கற்பனையில் -  அதைப்
பார்த்து நகைத்திட்டாள் காலப்பெண்ணே

ஏட்டில் எழுதும் உன் கற்பனைகள் - அட
எப்போதும் நற்கவி யாவதில்லை
போட்டுக் கிழித்தெறி குப்பையிலே - எனப்
பார்த்தே எனைக்கேலி செய்திருந்தாள்
வீட்டு அனுபவம் வீதிகடை - இன்னும்
வேறு சமூகத்தின் வேற்றுமைகள்
கூட்டி எழுது கவிதை என்றாள் - இந்தக்
கோலம் உன்கற்பனை வேறு என்றாள்

என்ன இதுவென்று ஏங்கி நின்றேன் - எந்தன்
எண்ணம் வடிப்பது இல்லையென்றால்...
வண்ண மலர்களும் உண்மையில்லை - அந்த
வானத்து வெண்ணிலா பொய்வடிவே
மண்ணும் மரமதும் கற்பனையே - இந்த
மாடும் குருவிகள் மாயங்களே
கண்ணில் காணுகின்ற வாழ்விதுவும் - வெறும்
காலம் செய்த மாயக்கற்பனையே

சங்கப் பலகையும் கற்பனையே - அதில்
சார்ந்த தமிழ் சொற்கள் கற்பனையே
பொங்கும் மொழிவளம் கற்பனையே -இந்த
பூமியும் யாவுமெம் கற்பனையே
கண்கள் காணும் வழி வாழுகிறோம் - அந்தக்
காட்சிப் பதிவுகள் மூளையிலே
எண்களும் கூட்டல் கழித்தலென -  அது
ஏற்படுத்தும் விம்பம் வாழ்க்கையன்றோ

அன்னை அளித்தஇப் பூமியிலே நாமும்
ஆடி முடித்துப்பின் போகும்வரை
மின்னி மறையும் ஓர் கற்பனையே இந்த
மேனி அழிந்திடப் பொய்க் கனவே
சொன்ன விதிமுறை பார்ப்பதென்றால் இந்தச்
சோதி இணையு மக்காலம் வரை
சின்னசின்ன மனக் கற்பனைகள் வாழ்வில்
சொல்லும்கவி யாவும் பொய்ப் பதமே

No comments:

Post a Comment