Friday 14 June 2013

திருப்பம் வேண்டும்

காற்றடிக்க கொடிபறந்த திசையும் மாறும்
கழனியிடை கதிர் முற்ற வானம் நோக்கா
நாற்றூன்ற வளர்நிலத்தைக் குனிந்து பார்க்கும்
நாளெல்லாம் கதிரோடத் கமலம் நோக்கும்
ஏற்றிவிட்ட காற்றாடி இழையை விட்டு
இதுவேண்டும் திருப்பமென அறுத்துஓடும்
மாற்றமிலை ஆழிதிரை மண்ணில்வீழ்ந்து
மனம்மாறித் திசைமாறித் திரும்ப ஓடும்

கூற்றதனை மனம்மாற்றிக் கொள்கைமாற்றிக்
கூடும்பல கட்சியினர் திருப்பங்கொள்வர்
தாற்பரியம் பேசுபவன் தண்ணி போட்டு
தலைமாறி நடக்கையிலே குணம்மாற்றுவான்
சோற்றினிலே வளர்ந்த உடல் திருப்பம் என்று
தோள்நிறைய பொன்னடுக்கும்,  திசையை மாற்றி
போற்றி யொரு வாழ்வளித்த சக்தி தெய்வம்
பொய்த்த இப் பூமிதனைத் திருப்பிடாதோ

இற்றைவரை நானிருந்த இயல்பை மாற்றி
எடுத்தெழுது கவிதையென ஆற்றல்தந்து
சேற்றினிலே தாமரையைச் செழிக்க வைத்தாள்
சிந்தனையில் தன்அருளை விதைத்த தெல்லாம்
நேற்றுவரை இல்லாத எண்ணம் இன்று
நெருப்பாகத் தீப்பற்றி  எரிவ தென்ன
ஆற்றுமவள் திண்ணமிது அன்பினாலே
அன்னையவள் எனைமாற்றித் திருப்பஞ்செய்தான்

ஓடிவருங் கார்முகிலும் மலையில் கூடி
ஊற்றுகின்ற நீர்மழையாய் திருப்பங் கொள்ளும்
ஆடிநடை போட்டுநதி அகன்றே யோடி
அடுத்தநிலை அருவியெனத் திருப்பங்காணும்
தேடிவரும் பிறமொழிகள் தமிழில்கூடி
தீந்தமிழில் திரிபுற்று திருப்பஞ்செய்யும்
கூடிவரும் எதிர்காலம் கணினி கேட்டு
குழந்தை மடிபிறந்தவுடன் மவுசைகொள்ளும்

வாழ்க்கையிலே மனிதகுலம் திருப்பம் வேண்டி
வாழவழி தேடிய நற்குடிகள் மீது
காழ்புணர்வே காட்டிமனம் கருணையற்று
காற்றினிலே வாக்குகளை  விட்டோர்தன்மை
பாழ்படவே இனமழிக்கக் கண்டோமன்றோ
பாதையிலே பெருமாற்றம் திருப்பம் ஈதே
வீழ்வதற்கு வேற்றுபலம் வெளிநாடென்று
விசமெடுத்த செயல் அழிவு திருப்பங் கொடிதே

மாற்றமென வாழ்கையிலே வந்ததெல்லாம்
மலையலவு திருப்பங்கள் ஆக்கிவைக்க
காற்றலையி லோடும்வா னொலிமுன்னதும்
கண்டதுபின் வாழ்வில்தொலை காட்சியுமாகி
நேற்றுவரை ஆதிக்கம் செய்தவைபோய்
நெட்என்றும் இணையமென நிலைத்தவாழ்வு
பாற்குடியர் விட்டுமறு படைப்பில் மனிதம்
பற்றிய செல்பேசிஎனப் பலதாம் உண்டே

மாற்றமென்ப வாழ்க்கையின்நற் திசைகள் மாற்றி
மறுபடியும் மறுபடியும் திருப்பஞ்செய்து
வீற்றிருந்து சிறுவர்களை வேகம்கொண்டே
வேட்டை என உயிரற்ற உருவம்கொல்லும்
ஆற்றல்தரு கணனிகளின் விளையாட்டெல்லாம்
அகத்தினிலே வெறித்தனமும் வெறுப்பும் ஆக்கி
மாற்றுகின்ற செயல் நாளை உலகில் செயும்
மாற்றமதை மாற்ற ஒருதிருப்பம்வேண்டும்

No comments:

Post a Comment