Tuesday 25 June 2013

வாழ்வினில் மகனே/மகளே !!

இசைகொண்டு தமிழ்பாட எழுந்தோடி வா - எங்கள்
அசைகின்ற விழிகாணும் அருஞ்செல் வமே - என்றும்
விசைகொண்டு நடமாடி வருந்தென்ற லாய் - காணும்
திசையெங்கும் மலர்தூவும் திறன்கொண்டு வா

மலர்கொண்டு தலைசூடி மகிழ்ந்தாட வா - அன்பு
உலர்கின்ற நிலைமாறி உறவென்று வா= எங்கும்
பலர்கண்டு புகழ்பாடிப் பணிகின்ற தாய் - காலை
புலர்கின்ற பொழுதோங்கும் பிரகாசந் தா

வளர்கின்ற மனம்மீது வடிகின்ற தேன் - சிந்த
இளகின்ற பாகாகி இனிப்பென்று வா - அந்த
தளர்வின்றி நடைபோடுந் திரைமூடும் வான் - செல்லும்
இளந்திங்கள் எனவென்றும் எழில்சேர வாழ்

சுவைகொண்ட கனிபோலும் சுகங்கொண்டு வா - கற்ற
அவை யென்னில் முதலென்ற அணியென்று காண் - இருள்
துவைகின்ற பொழுதாகத் துயர்நீங்கி வாழ் - கண்ணே
குவை கொண்ட கரமாகக் குறைவற்றுக் கொள்

மிகையன்பு தான்பெற்று மெருகோடு வா - இந்த
வகையெந்த நிலைகொண்டும் வளர், இன்பம் தா - எண்ணப்
புகைகொண்டே அகம்மூடும் புரியாமையால் - எந்தப்
பகைகொண்டும் வாழாமல் பழிநீங்கி வாழ்

மனமென்ன சொன்னாலும் மதிகொண்டு காண் - சின்ன
வனமாக்கள் வகையன்ன விதிசெய்யும் மெய் - கொண்ட
சினமாக்கும் உணர்வென்ப தீண்டாது காண் - என்றும்
தினமோங்கும் உதயத்துச் சூரியன் நீ !

பனிதூங்கும் இலைகொண்ட பசுமைதனும் - சோலைக்
கனி கொண்ட சாறென்னும் களிகொள்ளின்பம் - மேவ
இனியெங்கும் வாழ்வென்ப இதுபோன்றிலை -  என்னும்
தனியோங்கும் நிலைபெற்றுத்  தரைவாழ்வு காண் !

No comments:

Post a Comment