Tuesday 25 June 2013

கண்டிட வேண்டும்

நல்லதொரு வாழ்வு கண்டிட வேண்டும் - அந்த
நீள்பெருத்த வானிடையே நீந்திச்சென்றிட வேண்டும்
எல்லையற்ற தூரம் சென்றிருந் தாலும் - நல்
இன்பமுடன் வாழவொரு உலகம் கண்டிட வேண்டும்
தொல்லையற்ற சூழல் கொண்டிட வேண்டும் - அதில்
துன்பமற்று நான் தனியே சுற்றிவந்திட வேண்டும்
பல்விதப்பூங் காவும் சிற்றோடை நீரும் - அதில்
பங்கயமல்ர் பூத்தழகில் புன்னகைத்திட வேண்டும்

நில்லென்றெனை மனம் இருத்திடவேண்டும் - சோலை
நறுங்கனிகள் சுவைமிகுந்து பொலிந்த தருவேண்டும்
எல்லையற்று விரிந்திருந்திடவேண்டும் - அங்கு
இளங்குயில்நான் இசைபடித்தே இன்பங் கண்டிடவேண்டும்
இல்லையென்றே துயர் இருந்திட வேண்டும் - கொடும்
ஏழ்மையுடன் இயலாமை இடமிழந்திடவேண்டும்
வல்லதொரு  மனமெடுத்திட வேண்டும் - இனி
வருவதெலாம் இன்பமெனும் வளங்கொழித்திடவேண்டும்

கற்கும்மொழி தமிழ் நிறைத்திட வேண்டும் - பல
காவியங்கள் இலக்கியங்கள் கரைகடந்திட வேண்டும்
பொற்சிலையாய் தமிழ் ஜொலித்திட வேண்டும் - ஞான்
பூஜையென்று கவிதையெனும் பூச்சொரிந்திட வேண்டும்
பற்றினிலே நானிழைந்திட வேண்டும் - தமிழ்
பாவையுந்தன் காலடியில் பணிபுரிந்திட வேண்டும்
உற்றதுயர் ஒன்றிலை யெனவாகும் - என்
உள்ளமதில் உனைநினைத்தே ஓங்கிடும் நிலைவேண்டும்

அன்னையுந்தன் ஒளிபரந்திட வேண்டும் - அங்கே
அகத்தினிருள் போயொழிந்திட ஆணவம் கெட வேண்டும்
என்னைச்சுற்றி இளமலர்களும் மான்கள் - இனும்
இன்ப ஊற்றும் அருவியாகி எனைநனைத்திட வேண்டும்
தேன் தமிழில் சுவைநிறைந்திட நாளும் - நான்
தீந்தமிழில் பாவளித்திட நீமகிழ்ந்திட வேண்டும்
வான் எழுந்து நான்பறந்திடும் இன்பம் - இவ்
வையகத்தில் வாழுகின்ற வேளை கண்டிட வேண்டும்

ஏன்தமிழே எனை வருந்திடும் வாழ்வில் - யாவும்
அன்பு காணும் உயர்வு கொண்டு ஆனந்தமெழவேண்டும்
என்பிடையே நேர்மைகொண்டொரு நீளும் - என்றும்
ஏற்றமுள்ள வாழ்விலுயர் இன்பங் கண்டிட வேண்டும்
ஊன் உயிரும் சேர்ந்துழன்றிடும் நாளில் - என்
உடல்தனிப்பின்  உயர் ஒளியில் ஒன்றுசேர்ந்திட வேண்டும்
வானிடையே மின்னும் தாரகையாகப் - பின்
வாழ்வையெல்லாம் உன்நினைவில் வாழ்ந்துகண்டிட வேண்டும்

No comments:

Post a Comment