Tuesday 25 June 2013

எத்தனை நாளின்னும்?

தொட்டுத் தொட்டழைந்து மெங்கள் தோலிற் சேறுபூசியெம்மைத்
திட்டித்தீர்க்க வாயடத்த தேனையா - நம்
தோலிற் பட்டதென்ன செய்யக் கூறையா
கட்டிக்கட்டி மெய்புரட்டிக் கால்பதித்துச் சீரழித்து
தட்டித் தாளம் போட்டவர்க்கு வாழ்வையா- நாமோ
தாழ்வுகொண்டு வாழும் ஈன சாதியா

எட்டி எட்டிக் கால்கள் வைத்தே ஏற்றங்கொண்டு நாம்நடந்து
கிட்டஏக உச்சிமலை பாரையா - அது
கிடுகிடுத்தே அனல்வெடித்த தேனையா
நட்டநடு வீதிவைத்து நாலுதேசம் பார்த்திருக்கக்
கொட்டி நச்சுக் குண்டெறிந்தும் மௌனமா - இந்தக்
கூட்டத்துக்குப் பேரும் என்ன கூறையா

பட்டுப்பட்டே உத்தரித்த பாவமின்னும் தீரவில்லைக்
கொட்டும் ரத்தம் இன்னுமின்னும் தேவையா - நாமும்
கொண்ட துன்பம் நிற்கும் ஆண்டு கோடியா
தட்டித் தட்டித் தீயிலிட்டுத் தாளமிட்டே ஆடவிட்டுத்
தட்டையேந்திப் பிச்சையுண்டு வாழவா - வீரன்
தங்கத் தமிழ் என்ற வார்த்தை தேய்வதா

நிட்டை மௌனம் நிர்மலத்தில் நீண்டதோர் தவங்கிடந்து
கட்டியழும் பெண்கள் பார்த்துச் சொல்வதா - இது
காலந்தந்த கோலமென்று கூறவா
செட்டை  இரண்டடித்து வானிற் செல்லுகின்ற பட்சிதானும்
வட்டமாகச் சேர்ந்து சுற்றக் காணையா - நாமும்
வானக்கூட்டம் போலஒன்று சேர்வமா

திட்டமிட்டுக் குருவிசுட்டு தென்னந்தோட்டந் தீயிலிட்டுக்
கட்டிவைத்த மனைசிதைக்கக் காணவா -எங்கள்
கையிலொன்று மில்லையென்று நோகவா
பட்டுரத்தி னத்தையிட்டுப் பாவிஎன்னைத் தம்பியென்று
கட்டிமுத்தம் தந்தபோது கண்களும் - மூடிக்
காலனின் கயிற்றை மாலை என்பதா

பொட்டுவைத்துக் காதிற்பூவைச் சுற்றிவிட்டுச் செல்வதென்ன
விட்டு நீயும் வீறெழுந்து கொள்ளடா - இந்த
விந்தையென்ப தெங்கள் பக்கம் வீணையா
நட்டுவைத்த சிற்பமென்று நாளும் சோர்ந்திருத்தல் விட்டு
எட்டிக்கால்கள் வைத்துசெல்லக்  கூடையா - நாமும்
ஏறுபோல் நடந்துவீறு கொள்வமா

No comments:

Post a Comment