Tuesday 11 June 2013

உன்னை அறிவோமோ ?

அம்மையவள் அப்பனோவென் றறியேன் -  எனையீந்த
ஆதாரத் தீயினுரு காணேன்
செம்மையதோ வெண்ணொளியோ தெரியேன் - அண்டமதில்
சீறியுமிழ்  தீக்குழம்பின் வகையென்
இம்மைதனை இவ்வுலகில் கண்டேன் - இங்குதனும்
இருக்குமிடம் ஏதறியா தலைந்தேன்
எம்மையெது காரணியோ வைத்தாள் - இவ்வுலகில்
எல்லையற்ற பாசத்துள் பிணைத்தாள்

பெற்றவளும் தன்வயிற்றில் கொண்டே - மாதமென்ப
பத்துவரை சென்றலைந்து ஈந்தாள்
கற்றுவரக் கல்விபயில் கூடம் - காட்டியும்பின்
காணுலகில் கடமையறி வீந்தாள்
விற்றும்பல நன்மையொடு தீமை - வாங்கியதில்
வேடிக்கைகாண் விதியினோடு கூடி
உற்றதென்ன துயர்நிறைந்த வாழ்க்கை - முடிவிலிங்கு
உள்ளதென்ன வீணுழன்ற யாக்கை

மண்ணுடலில் மாயசக்தி ஏற்றம் - இறுதிவரும்
மரணமென்னும் மின்னுணர்ச்சி நீக்கம்
எண்ணமெனும் புரிந்திடாத அலைகள் - அவையுமீற்றில்
எங்குசென்று முடியுமென்னும் இருள்கள்
வண்ணம், இருள்  வார்த்துசெய்த உலகம் - ஓடிக்கண்ட
வானஜோதி சூரியன் குடும்பம்
கண்ணெதிரில் கலைந்துபோகு மோர்நாள் - நாமுமங்கு
காணுபவை மீதமென்ன சூன்யம்

பெண்ணுருவாம் பிரபஞ்சத் தாயே -  நீயும்வானில்
புன்னகைத்து நிற்பதெங்கு கூறேன்
உண்மைதனை வேலியிட்டு மூடி - இவ்வுலகை
உருளவைத்த மாயமென்ன கூறு
விண்ணிலொளி வீசவிட்டுப் பொய்மை - கொண்டதான
வெற்றுநீல நீள்திரையும் போட்டாய்
கண்ணெதிரே நீயிருக்கும் தோற்றம் - நாமதனைக்
காணுமொரு ஞானமதைத் தா தா

**************

No comments:

Post a Comment