Sunday 11 January 2015

இயற்கை அழகு


வனைந்த கலயமும் மிதந்த நீரென 
வடிவொடு  வானில் நிலவேக
முனைந்து மறைவிடும் இருண்ட முகில் வர
மருண்டு நிலவதை விட்டோட                
நனைந்த குளமலர் விரிந்த மலரல்லி
நினைந்து மகிழ்வொடு தலையாட்ட
அனைத்து மிவை எழில் எடுத்திருப்பினும்
அழகில் தமிழ்க்கவி பெரிதன்றோ

கனிந்த மரமதி லிருந்த குயில்தனும்
கலந்த மகிழ்வினில் இசைபாட
நனைந்து நறுமணம் மெழுந்த மலர்வன
மிருந்த தென்றலும் எழுந்தோட
குனிந்த கதிர்களும் நிறைந்த கழனியில்
குலவக் கதிர்நெல் வளைந்தாட
பனித்த புல்வெளி பரந்த பசுமெழில்
பகரில் தமிழ் பெரும் அழகன்றோ

தனித்த சுவைகொளும் இனித்த தமிழ் வழி 
தந்தோர் ஏடுகள் பல தூக்கி
பனிக்குளி ரில்மது குடிக்க வருமலர்ப்
படுக்கை யமர்ந்துண் வண்டாக
இனித்த தமிழிசை இழைத்த கவிகளும்
நினைத்துப் படித்திட அழகென்றே
இனிச்சை கொளுமனம் இயற்கையதன் வரம் 
எடுத்த உணர்வுகள்  அழகன்றோ

விளைந்த இரவிருள் விடிந்தவேளையில் 
வெளுத்துக் கீழடி வான் சிவக்க
குழந்தை கையினில் அளைந்த குங்குமம் 
கொண்ட தனின் முகம் பூசியதாய்
கொழுந்து தீயெரி கோலமுடன் வான்
கொண்டெழில் காணினும் அன்புடனே
குழைத்த அமுதினை நிகர்த்த தமிழ்க்கவி
கொள்ளுமெழில் மிகப் பெரிதன்றோ

இழைந்த வலியொடு திகழ்ந்த வீரமும் 
எடுத்த தமிழ்மற வீரர்களும்
நுழைந்த பகைதனை விரைந்து ஓட்டியும்
இழந்த நிலமதை மீட்டெடுக்க
விளைந்தமுடிவினை வெறுத்த உலகமும்
வினை கொண்டியல்பினை மாற்றவர
தளர்ந்த நிலைதனும் மறைந் து சுகம் பெறும் 
தருணம் வரின் பெரும் அழகன்றோ

----------------------

No comments:

Post a Comment