Tuesday 20 January 2015

கனலொளியே காவாய்

           
ஞானத்தை வேண்டி நடக்கிறேன் யானும்
நான் தவிர வேறதையுங் காணேன்
ஊனதைப் பிடித்தே உந்திடும் சக்தியென்
உள்ளத்தில் சொல்வதைச் சொன்னேன்
தேனதைத் தந்தாள் தித்திக்க நெஞ்சில்
தேவையா சஞ்சலம் ஈந்தாள்
நானாக கேட்கா நலிந்துள்ளம் வற்றி
நட்பிலே பகையெண்ண விட்டாள்

மோனத்தில் ஆழ்த்தி மூச்சினை அடக்க
முனைகின்ற விதியையும் நோக்கி
தானன்பைக் கொண்டு தடையங்குபோட்டு
தரணியில் வாழ்ந்திடச்செய்தாள்
ஞானத்தைத் தந்தால் நானின்பங் கொள்வேன்
நாடாது தடுமாற வைத்தகே
கானத்தைப் பாடும் கற்பனை தந்தும்
கடல்மீது ஒடமென் றிட்டாள்

பூநக்கும் வண்டும் பூமியில் காணும்
பூவெங்கும் தேடியே திரியும்
தேனுக்கு ஆசை திகட்டாது என்றும்
தேடியலைந் திடும் வாழ்வு காணும்   
வானுக்குள் கோடி வண்ணத்தீ சுற்ற
வையத்தை செய்தெம்மை வைத்தும்
எனென்னைச் சுற்றி எங்கெல்லாம்தேடி
இதயத்தில் நிறைவின்றி விட்டாள்
வானத்தி னொளியே  வாழ்வுக்கு அதிதி
வார்த்தை தந்தே கூறச் செய்தாய்
கூனுக் கென்றாகும் கொள்கையில் இன்றி
கொண்டுபல இன்னுறவு காப்பாய்
வீணுக்கு நானும் வெளியெங்கும் தேடி
விரைகின்ற முகில் மட்டும் கண்டேன்
காணுள்ளத்தூடே கனலென்றுஆக்கும்
கடும் உணர்  விட்டென்னைக் காவாய்

No comments:

Post a Comment