Tuesday 13 January 2015

சக்தியைப் போற்றுவோம்

 
ஆதிமூல சோதியான அன்னை சக்தியே
ஆளவென்று நீவகுத்த தாமிவ் வாழ்வதில்
பாதிதுன்ப மோடப் பாதி இன்ப மாகிடப்
பாரிலே பிழைத்துமேனி பக்குவம் பெற
தாதினம் அருள் எமக்குத் தாவும் வெண்ணலை
தூவிடும்மழை பெருத்துத் தோன்றுமாநதி
போதினில் புரண்டுவீழப் பொங்குதே புனல்
போலும்புத் துணர்வெடுத்த பொங்குமின்பம் தா

நாதியற்று நாம்கிடந்த வேளை போயினி
நல்ல வாழ்வு கொண்டெழுந்து நாளுலாவிட
ஊதியே பெருத்தமேனி உப்பினைக் கொண்டும்
உன்னதம் என்றேநினைத் துவந்து போற்றிட
காதில்லாதும் உமையாகிக் கண்கள் போனதாய்
காலகாலமாக வாழ்ந்து கந்தலாய் உடல்
ஊதியே பெருத்த வீம்பில் உள்ளம்தீதெண்ணா
உண்மை நேர்மைகொண்டு வாழ்வில் ஓங்கிடச் செய்வாய்


நீல வானில் மேகக்கூட்டம் நீந்தும் வேளையில்
நீயளித்த வெங்கனல் கொண்டே உயிர்தரும்
கோலமோ சிவந்து வானடிக்குத் தோன்றிடும்
குங்குமப்பொன்னாகி வெண்மைகொள்ளும் மாசுடர்
காலமான ஆதிவேளை காணும் நீரொடு
காய்ந்தமண் கலந்துமேனி காணுயிர்கொள
சாலநேர் கணிக்கும் தன்மை சார்ந்துன் சோதியால்
சுற்றியிவ் விரைநிலத்தில் செய்தமானிடம்

ஏழ்மையுற்று வாய்மைகெட்டே வாழ்நெறிக்கெதிர்
ஏற்றதான  பொய்யுடன்  பித்தான செய்கைகள்
காழ்மைகொண்டு நீசராகிக் காணுவர் பகை
கொண்டெவர்க்கும் தீங்கு செய்து கண்ணிழந்தராய்
வாழ்வுதன்னை ஏதென் றெண்ணி வந்தணைந்திடும்
வாய்ப் பனைத்தும் கைகள் விட்டு வாயரற்றியே
வீழ்ந்தும் மண்ணில் சோர்ந்துழன்று வீணெனப்படும்
விகற்பம் நீங்கி மேன்மைகொள்ள வாவரம் தாராய்

காலசூன்ய மாயிருள்கொள் கரும்முடக்கிலே
கங்கை வெள்ளம் போலொளிக் குழம்பின் வீறொடு
தூல ரூபமாய் வெடித்துச் சீறும்சக்தியால்
துன்பமற்றே ஆடிக்காணும் தோற்றுதல் செய்தாய்
ஞாலமும் நம்மேனியும் எண் நாட்கள் என்றுமே
யாத்திரை மற்றோர் விதம் எற்றெம் முயிர்தனை
நீல விண்ணின் சூட்சுமத்தில் நீவரைந்ததேன்’
நிர்மலக் கண்முன் மறைத்த நீதி யென்ன சொல்!
*****************

No comments:

Post a Comment