Tuesday 13 January 2015

உறவா ? பகையா?

நிலை குலையும் நெஞ்சேசொல்  எதிரிதானோ
நிர்க்கதி யென்றென்னையும் நீ விட்டதேனோ
கலை மணந்த வாழ்வில்  காண் இன்பம்தள்ளி
கருக உளம் வேதனையும் செய்தல் நன்றோ
சிலையுருவம் கல்லாகிச் சேர்ந்தே நின்றாய்
சிரிப்பிரு ந்த காலமதை மாற்றி வைத்தாய்
மலையெனவே நம்பி யுனை மனதில் வைத்தும்
மறந்தெனையே வருத்தமுறச் செய்தாயேனோ

பலசெயலும் கண்டுமென் பார்வையறியா
பனிமூடும் மலை போலே புதைந்திருந்தாய்
சிலபிணிகள் எனதுயிரைக் கொள்ள வந்தும்
சிறுமை கொண்டும் உணர்வற்றுப் பார்த்து நின்றாய்
கலகல வென்றாடியான் களிப்பே  கொண்டால்
கணம்துடிப்பில் நிரைதவறி கடமை தோற்றாய்
இலதுலகில் இனிமை இதுவரையில் என்றே
இழி துயருள் ஏற்றி வைத்தெம்மைக் கண்டாய்

எதை விழிகள் கண்டும் எதையறிந்துகொண்டும்
இறைவழியை நீமறைத்த தென்னே சொல்வேன்
வதை விழிகள் கொண்டவளை  வனிதை யென்றாய்
வழிதவறும் விதம் உணர்வை கிளர்ந்து சாய்த்தாய்
புதைகுழியில் வீழுமிப்  பொல்லா உடலைப்
பொன்னெனவே போற்றும் குணம் என்னில்தந்தாய்
அதையறிந்து நெஞ்சினிலே ஆசை கூட்டி
அவளருகில் ஆடி நிலம் வீழச் -செய்தாய்

மலம் நிறைந்த உடலும் மருந்தகற்றாப் பிணியும்
மனையுடனே இரந்தழியும் உறவும் கொண்டு
புலன்வழியே  இன்பத்தை தேடும் புழுவாய்
புனிதமென்று கீழெண்ணம் போற்றச்செய்தாய்
கலகமென்று கருத்தில்காண் முரணைக்கொண்டு
கண்டவரும்  கேலிசெய்யும் வண்ணம் வைத்தாய்
உலகமென்னும் மாயை உருண்டலையும் கோளில்
உருகிமனம் அன்பினையே கொள்ள வைத்தாய்

எதை எனக்குநன்மை எனவிழைத்தாய் நெஞ்சே
இதுவரையில் எதுவுமிலை இன்றோ பாராய்
சிதை யிலிடும்  உடலில் தீங்கிழைக்க எண்ணி
சீர் எழுந்த வாழ்வசைவிற் தோற்றேனென்று
உதைகொண்ட வகையில் உனது சந்தம் விட்டே
உழன்றலையப் போதும் வலிசெய்தாய் ஏனோ
கதையும் முடிவாக்கிக் கரும்வெளியிற் தள்ளி
கனவை யொழித்தாக்க மனம்கொண்டதனாலோ?

No comments:

Post a Comment