Tuesday 13 January 2015

தன் துணையைப் பிரிந்த குயில் இசைக்கும்` கீதம்

தென்னைமரச் சோலையிலே
  திங்கள் எழும்போதினிலே
     என்னருகில் நீயிருந்தாய் இன்குயிலே அதில்
பின்னியிழை வெண்முகில்கள்
   பொன்னிலவைப் போர்த்திருக்க
      என்னை மனம் பூக்க வைத்ததுன் குரலே
சின்னமலர் சூடும் தரு
   சில்லெனவே வீசு தென்றல்
      சென்று விழிமீது மையல் தந்திடவே
கன்னமதில் நீ இணைந்து
     காணுமிசை பாடலிட்டு
        கண்ட இன்பம் ஏன்மறந்தாய் பொன்குயிலே

மென் னரும்பும் பூக்கள் சில
   மேனிமலர்ந் தின்பம் பெறும்
       மெல்லிருளில் மூழ்குமந்தி வேளையிலே
அன்புடனே நீ நெருங்கி
   ஆதரவென் றாகிவிட்ட
        அத்தனையும் எண்ணுகிறேன் வா குயிலே
அன்று கொண்ட நிலைமறந்து
     இன்றெனையும் வாடவிட்டு
         என்னசொல்லிக் கூவுகிறாய் இன்பமென்றே
நின்றழவும் ஈர்விழிகள்
    நீரிறைத்து ஆவலுற்று
        நிர்க்கதியில் வாடுகிறேன் இன்னலுற்றே

நன்னயல் நீர்ப் பொய்கையிலே
   நாம்நனைந்த வேளையன்று
      நீர்தெறிக்க மேனிசிலிர்த்தேன் குயிலே
என்னை மலர்மீது கண்டே
  உன்விழிகளால் வியந்த
    அன்பதனை ஏனிழந்தாய் சொல்குயிலே
வன்மைகொண்டு காணுவதேன்
    வண்ணமலர்த் தேனையுண்டு
      வாயினிக்கப் பாடிடலாம் வா குயிலே
இன்மை கண்டு வாடுகிறேன்
    எண்ணி மனம் பூக்களென
      இச்சை கொண்டேன் ஏக்கமுடன் இன்குயிலே

அன்புகொண்டு நானிருந்தேன்
   ஆவலுடன் காத்திருந்தேன்
       அற்பமென ஆக்கிவிட்டதேன் குயிலே
மின்லெனப் போனஅன்பு
  மெய்மையிழந் தாவதென்ன
      மேலும்வகை நானறியேன் வெல்வதற்கே
சின்னமனம் வாடுகின்றேன்
   செங்கரும்பும் வாய்கசந்தேன்
      சேரும் சுகம்தான் வெறுத்தேன் சொல்குயிலே
பன்நெடுத்த வான்பரப்பில்
   பைந்தமிழின் கானமழைப்
     பாட்டிசைக்கக் கூடிவாராய் என்குயிலே
*******************

No comments:

Post a Comment