Tuesday 20 January 2015

முயன்றிடு நாளும்

ஊர் நிரம்பவும் ஓடுது பார் வெள்ளம் - இதில்
உனக்கு மட்டும்  வரண்டிருப்பதென் நெஞ்சம்
பார்முழுவதும் மண் படர்ந்திட்ட தோற்றம் - இதில் 
பார்த்து வைத்தும் உன் காலில் குத்துதே முள்ளும்
தேர்ந்தது மென்ன மேற்படிப்புடன் பட்டம் - அவை 
தேவையற்றுமே வாழ்க்கை ’கண்டது  வட்டம்
வேர் குடித்திட நீர் இறைத்திடும் தோட்டம் - அங்கு
வெயில் மறைந்தும் பின் பூக் கருகிடும் வாட்டம்

சேர் உளத்திடை திண்மை கொண்டெழு - உந்தன்
தேர் அசைந்திடும் தெருமுழுவதும் நின்றன்
பேர் துலங்கிடப் பெரிது முந்தனைச் சொல்லும் - புகழ்
பிறை வளர்ந்திட முழுமதியு மென்றாகும்
காரிருட்டது விலகி யோடுமே கங்குல் - எழும் 
கதிர் வெளிப்பென்று நின் கனவுகள்  மின்னும்
நேர் நடந்திட்ட பாதையும் உனதாகும் - எங்கும் 
நிழல் தருக்களும் மலிந்திடச் சுகம் சேரும்

வார் இறைத்திடக் கொட்டுது நீரோட்டம் - அது 
வாழ் செடிதனுக் குயிரளித்திடும் ஊட்டம்
போர்முடிந்திடக் கூடிடும்நி சப்தம் - அதில் 
புன்னகைகளின் பொய்நிறைந்திட்ட பாவம்
யார் எடுத்திட்ட வாளும் பையினுள் செல்லும் - உன் 
ஞானம் கண்டிடும் வீரம் சுகத்தை நல்கும்
கூர்மதிகொண்டு ஆளுமைதனும் கொள்வாய் - உன் 
குரல் பெருத்ததொரு மனம் இகத்தினை வெல்லும்

நம்பிக்கை யுடன் நடந்து செல்லும் வாழ்க்கை - அது 
நாளும் அன்புடன் காணும் வாய்மை நேர்மை
செம்மனத்தில் கொண்டு சென்றிடு என்றும் - இனம்
சேர்ந்து வாழ்ந்திடு சுதந்திரமே வேண்டும்
எம்மிடரிலும் காணல் விட்டிடு சோர்வும் - அது
உன்நிலைதனில்  கொண்டு தந்திடும் தாழ்வும்
எம்மினத்திடை காணுமின்னலும் தீர்க்கும் - அந்த
நாள்தனை யும் நீ எண்ணி யங்குதல் வேண்டும்

No comments:

Post a Comment