Monday, 19 January 2015

கற்பனை உலகம்


வண்ண விளக்குகள் மின்ன ஒளிர்ந்திடும்
வாசலில் நின்றிருந்தேன்
எண்ணமதில் இன்ப ஊற்றெடுக்க வீதி
எங்கும் வனப்பைக் கண்டேன்
கண்ணுக் கழகெனும் வண்ண அலங்காரக்
காட்சியில் மெய்சிலிர்க்க
தண்பொழில் ஒன்றயல் மண்டபமும் எழில்
தாங்கியோர் தோற்றம் கண்டேன்

என்ன நடப்பது என்றறிய மனம்
ஆவல் கொண்டும் தவிக்க
சின்ன அடியெடுத் துள்ளம் தயங்கிடச்
சென்றுள்ளே காணுகிறேன்
மன்னன் அரண்மனை போலிருந்த  ஒரு
மண்டபத்துள் நுழைய
அன்னதோர் காட்சியைக் கண்டே மனம் சொக்கி
‘என்னை மறந்துவிட்டேன்

பொன்னெழில் மின்னுஞ்சரங்கள் பொலிந்திடப்
பூவின் நல்வாசமெழக்
கன்னியர் ஓடி நடனமிடும் ஒலி
காதினில் கேட்டு நிற்க
மின்னிய வண்ண விளக்கெரிய அதில்
மேனி சிலிர்த்துமெழ
என்னது காண்பது சொப்பனமா என
எண்ணி வியந்து நின்றேன்

உள்ளே நுழைந்தவன் கண்களை மூடியே
ஓர்கணம் மெய் சிலிர்த்து
கிள்ள விரல்பற்றக் கையில் வலித்தது
கொல்லென வோர் சிரிப்பு
தள்ளி ஒருநகை பூத்த முகத்துடன்
திங்களின் தங்கை நின்றாள்
எள்ளி நகைக்கு மப்பெண்ணவள் மீதினில்
ஏனோ சினமெடுத்தேன்

வெள்ளி மணிச்சரம் கொட்டிய தாயவள்
வேண்டு மென்றே நகைத்து
அள்ளித் தருமெழில் அங்குநிறை மின்னி
ஆடும் சரங்களூடே
உள்ளம் உவகை கொண்டென்னுடன் பேசிட
ஓடியருகில் வந்தாள்
துள்ளும்நடை தனில் வந்தவள் மன்னவா
தாமதமேனோ என்றாள்

தங்கள் வருகைக்குக் காத்திருந்தோம் மனம்
தன்னில் உவகைகொண்டோம்
செங்கதிரின் விடி வேளை உதயத்தில்
சேருவீர் என்றறிந்தோம்
எங்கும் மலரினை இட்டுவைத்தோம் ஆயின்
ஏனோ வரவு பொய்த்தீர்
பொங்கும் அவள்மொழி கண்டேன் விநோதமே
பேச்சறியாது நின்றேன்

சட்டென மேளமும் கொட்டு மொலியெழச்
சந்தண வாடையெழ
பொட்டு வைத்த தமிழ்ப் பூவையராடிடப்
பூமழை தூவி நிற்க
கொட்டி முழக்கக் கைதட்டும் ஓசையெழக்
கொண்டனன் ராஜநடை
எட்டி நடக்கத் தேன் சொட்டும் மலர்த்தமிழ்
கொத்தொன்று கையளித்தாள்

மெல்லத் திரும்பியென் அண்மை விட்டேயவள்
மீண்டும்செல்ல விழைய
நில்லுபெண்ணே இங்கு என்ன நடப்பது
நேர்நிலை மாதவறாம்
சொல்வதென்ன வரும் எண்ணம் எனக்கில்லை
சொப்பனம்போல் நுழைந்ததேன்
மெல்ல உள்ளேவந்த என்னை நிறுத்தியிம்’
மாலை கழுத்திலிட்டாய்

என்ன சொன்னாய் என்னை மன்னவனே என்றும்
எப்படி நீயழைத்தாய்
சொன்ன தமிழன்றி சொல்விதி மேவிடும்
சுந்தர ஞானமற்றேன்
என்னவித மிங்கு வந்தனன் என்றுயான்
எண்ணி மயங்குகிறேன்
கன்னிமகளே நீயாரெனக் கேட்டேயென்
கண்கள் வியந்து நின்றேன்

அங்கவள் மீளவும் புன்னகைத்து என்னை
ஆழ விழித்தவளாய்
தங்கத் தமிழ்க்கவி செய்பவரே இது
தங்களின் இராட்சியம் காண்
இங்கு தினம் தினம் எண்ணக் குதிரையில்
ஏறியித் தூரம் வந்தே
பொங்கும் தமிழ்க்கவிக் கென்று பொருள்கொண்டு
போகும் வழமை கொண்டீர்

இங்குள யாவுமே உங்கள் மனங்கொண்ட
எண்ணத்தின் கற்பனைகள்
எங்கள் நிலையுண்மை ஏதுமிலை உங்கள்
எண்ணத்தின் ஏவலர்கள்
மங்கும் இளமாலை மாமலர்ச் சோலையில்
மன்னவன் நீயிருந்தே
சங்கத் தமிழ்மணம் பொங்கும் நினைவொடு
சற்று விழி அயர்ந்தீர்

இந்தவி நோதம்கொண் டெண்ணம் கிளர்ந்திட
எம்மை உருவகித்தீர்
சந்தமு டன்கவி செய்திடவே யிந்தச்
சாகச எண்ணங் கொண்டீர்
சுந்தரமாய் இந்த சூழ்மன லோகத்தை
சொல்லின் சுவையெடுத்தே
வந்திருந்தே வளம் ஆக்கிவிட அந்த
வார்த்தையில் வாழ்ந்திருந்தோம்

செந்தமிழிற் சுவை சேர்த்திடவே இந்தக்
செய்கையெலாம் அறிவோம்
இந்தக் கணமென்ன ஆனதுவோ உங்கள்
எண்ணம் மயங்கக் கண்டேன்
அந்தோ விடைபெற்றுச் செல்லுகிறோம் எங்கள்
ஆக்கம் விரும்பும் கணம்
சிந்தை கொள்ளும்நாமும் வந்திடுவோமெனத்
சொல்லி மறைந்தனள்காண்!

No comments:

Post a Comment