Tuesday 13 January 2015

ஒளியானவள்


ஒளியொன்று பெருவானில் உருவானது - அது
உலகென்ற ஒருவிந்தைப் பொருள்செய்தது
வெளிதன்னில் அசைந்தோடும் சுழல்செய்தது - பின்
விருப்போடு அலைகாந்த வலைகொண்டது
வளிபோலும் நிலையற்ற அசைவோடது - புவி
வாழென்றே உயிர்த் தீயை வளர்க்கின்றது
நெளிகின்ற அலைபோலும் நிற்காதது - ஓர்
நெடுவானின் இயலோடு நெறிகண்டது

உளிகொண்டு சிலைசெய்யும் செயல்போலவே - உயிர்
உள்நிற்க உடலென்னும் பொருள்செய்தது
குளிர்மண்னில் அனல்சுட்டு குடமாகுது - இங்கு
குவிமண்ணில் ஒளிசுட்டுக் கருவானது
விழிதன்னில் ஒளிபட்டு உணர்வாக்கியும் - ஓடி
விலகென்ற புவிமீது அதிகாரமும்
மொழிகூறல் தனில்சப்த விசைகூட்டியும் - அவை
முடிவாக உருவாக்கி வழிசெய்தது

வெளிர் மேகம் விளையாடும் விண் மீதிலே - படர்
வெயில் என்று அவைவாழ ஒளி செய்தது 
அழி என்று பழமைகளைச் சிதைக்கின்றது - அதில்
அழகென்று மீண்டும் சிலபுதி தாக்குது
வெளியென்ற  பிரபஞ்சம் வியந்தோடிடும் - பல
விண்ணசைவுப் பின்னலென விதிபோட்ட பின்
களி கொண்டு வாழுருவம் உயிர் தன்னையே - ஒரு
காமஇசை போகமுனை வோடீந்தது 

புவிமீது பயிர் பச்சை மரமாக்கியும் - அதில்
புனல்பட்டு வளர்கின்ற வழிசெய்ததும்
குவிவானின் நிறையோட்டம் அசைவென்பதே - எனக்
கோடானு கோடிவகை அசைக்கின்றவள்
தவி யென்று தன்பாகம் தரைமீதிலே - விட்டுத்
தகும் வாழ்வில் துயர்தன்னைக் கொள விட்டவள்
செவி காணும் மொழி வகையில் பலவாகவும் அவை
செய்கின்ற துன்ப நிலை இடை வைத்ததென்?

********************************* 


No comments:

Post a Comment