Monday 19 January 2015

அழகே அழகு!



அழகும் இன்பமும்

குடும்பத்தில் மகிழ்வை பெருக்கலும் கூட்டலும் பெண்ணுக்கழகு
வரும் இடர்களை வகுத்தலும் கழித்தலும் ஆடவர்க்கழகு என்று நட்பை
உடைய ஒரு பாவலரின் தொடக்க அடியை வைத்து எழுதினேன்


பெருக்கலும் கூட்டலும் பெண்மைக் கழகு
பேச்சினில் இனித்திடல் நாவினுக் கழகு
வகுத்தலும் கழித்தலும் ஆடவர்க் கழகு
வருந்துயர் நீக்குதல் வீரத்தி னழகு
உருக்கலும் மெருகிடல் பொன்னிற் கழகு
உடுத்தலும் சிறுத்தலும் உடல் தனுக் கழகு
வருத்துதல் நிறுத்திடின் வலியோர்க் கழகு
வாய்மையைப் போற்றுதல் ஆளுமைக் கழகு

கருத்தினைப் பகிர்வது சான்றோர்க் கழகு
கணித்திடல் ஆய்வுகள் கொள்மதிக் கழகு
பெருத்த நற் சோலையில் பூக்களும் அழகாம்
பெய்மழை அருவியும் வீழுதல் அழகு
கருமுகில் நீங்கிடக் காணடி வானும்
கன்னியின் நாணத்தின் செம்மையும் அழகே
சரிந்துயர் வானத்தில் சென்றிடும் பறவை
சேர்ந்தெழில் வரைந்திடும் கோலமும் அழகு

நீடுறை வான்தொடு கோபுர உச்சி
நேர்செல்லும் வெண்முகில் நீந்தலு மழகே
காடுகள் மாவனக் காட்சிகள் தோன்றும்
கற்பெரு பாறைகள் அற்புதம் அழகே
போடு நீர்த்தூறலில் வானவில் அழகு
பூமழை தூவிடும் சோலைகள் அழகு
தேடும் எம் தெய்வமும் திக்கெங்கும் ஓடி
திசை பல போயறி ஞானமும் அழகே

நாடும் நல்வாழ்வினில் நல்லரசாள
நாமும் சுதந்திர தேசமென்றாக
கூடும் உறவுகள் கொள்வதும் அழகே
கொள்கை சிறப்பதும் நேர்மையு மழகே
பாடுமிசை மகிழ்வாக்கிடும் இதயம்
பள்ளிச் சிறார்களின் துள்ளொலி இன்பம்
வாடும் மலர்களின் வாழ்வினைக்காண
வந்தே மலர்ந்திடும் சுதந்திரம் அழகே!

No comments:

Post a Comment