Tuesday 13 January 2015

தீரப்புயல் வேண்டும்,

பேசாதே உள்ளத்தில் சக்திகொண்டேன் - வெறும்
பேச்சில் இழந்திடச் சித்தமற்றேன்
பூசாத நீறணி நெற்றியென - இங்கே
போக்கிடும் வாழ்வில் வெறுமை கண்டேன்
ஆசா பாசங்களின் கட்டினிலே - நின்று
ஆடிக் கழித்திடவா பிறந்தேன்
வீசாத தென்றல்கொள் பூவனமா  - இந்த
வீணையை வீதியில் வீசுவதா

.தேசமும் காலடி கீழ் இழந்தேன் - அதைத்
தேடியும் மாகடல் நீண்மைகண்டேன்
கூசாது பூமியில் கொல்லுமிச்சை -  கொண்டு
கூடிஅழித்திடும் நீசர் கண்டேன்
ஊசலாடுமுயிர் கொள்தமிழர் - என்னும்
உள்ள நிலவரம் நீளுவதா
நாசமெழுந் தெங்கும் கூடுவதா - அதை
நாமறிந்தும் வாயைமூடுவதா

வீசாத தேன்புயல் உள்ளத்திலே - அதில்
வீறுகொள்ளும் நெஞ்சம் வீரத்திலே
தீசேரின் மாஎரி பொங்கும் மலை - உந்தன்
தேகமும் கொள்ளுமென் றானநிலை
வாசேர்ந்து வாழ்வில் அறமெடுப்போம் -  அங்கு
வந்திடர் கொன்றுநம் வீடமைப்போம்
பூசாய்ந்து போகக் கதிர் விழுந்து - எங்கள்
பூமியிருளமுன் போய் விளக்கை

வாசலில் ஏற்றி வெளிச்சம் செய்வோம் - இயல்
வற்றிக் குறைகொண்டபெண்ணினத்தின்
வீசும் எழில்முகம்தான்மலர - அங்கு
வேள்வி யாகம்செய்து மேன்மை கொள்வோம்
நீசநெஞ்சங்களத் தீயிடுவோம் - அங்கு
நேர்மைத் தீ நெய்யிட்டு ஓங்கவைப்போம்
வாசிறிதும் இனிக் காத்திருந்தால் - எங்கள்
வாழ்வழியும் விழி  கண்டிடுவோம்

கேசமெழில் பூவை கொண்டவளின் - மென்மை
கொண்டபெண்ணின் இயல் தானழித்து
மாசுறச் செய்பவன் மன்னனெனில் - தானும்
மாற்றி அமைத்தொரு நாடு செய்வோம்
கூசிடும் செய்கைகொள் கேடி கள்ளன் - கெட்ட
காமுகரை விட்டு ஓட்டிடுவோம்
வீசகொடும் புயல் நாடழிக்கும் - எங்கள்
வீரப்புயல் தமிழ் வாழ்வமைக்கும்

No comments:

Post a Comment