Tuesday 13 January 2015

இருளும் ஒளியும் காணும் வாழ்விதே!

சந்தன மேனியும் கொண்டடி வான்கதிர்
   சகமதில் ஒளி மேவும்
சுந்தர வானின் சிவந்திடுங் கீழடி
    செங்கதிர் வரும் காலை
விந்தை எழில்பெற வேகமுடன் மலர்  
   விரிந்திடும் விடிவேளை
செந்தமிழில் இசை கொண்டெழும் உள்ளங்கள்
   சேர்ந் திறை அருள் நாடும்

சிந்தனைகொண்டு கலைந்திடும் எண்ணங்கள்
    சீர்பெற வளம் தேடும்
மந்தமெனும் உணர் வாகிக் கலங்கிய 
   மனமிடை தெளிவாகும்
எந்தவினோத விளைவது மின்றிமெய்
  இடர்கொள உயிர் நோகும்
குந்தகம் செய் உணர்வென்ப மனந்தனில்
   கொண்டநல் வழி மாற்றும்


செந்தமிழ் பாடலும் சேர்ந்திட வானெழும்
     சில்லெனும் குளிர்காற்றும்
நந்தவனப் பொழில் நல்லெழிற் பூவன
      நிறைபுனல் அலையோடும்
சிந்தனைஓவியம்  செய்யுமெழிற் கலை
     செவ்வன காட்சிமயம்
வந்திவை துய்த்திட வாழ்வி லினித்திட
      வருமுணர் வானந்தம்,

அந்தி வரும் மனம் ஆடிக் களைத்தொரு
     ஆண்டவன் சந்நிதியில்
நந்தி தனும் மறை ஞானத்திரு பரன்
     நாடி யருள் வேண்டும்
சந்திரனோ பரம்கொண்ட சடாமுடி
  சேர்ந்தொளி பிறையாகி
விந்தைநிலை கொண்ட போதும் ஒளிர்ந்திட
     வாழ்வும் அதைப் பேணும்

எந்தையும் இந்த நிலாவிடை அம்மையும்
   இருந்திட வாழ்வோங்கி
முந்தைய நாளகம் ஒன்றெனக் கூடவென்
   மூச்சினில் காற்றோடும்
சிந்தை நிறை யன்பு திகழ்வதிலே எழும்
    செம்மையி லுயிர் நாதம்
வந்தும் உடல்தொடும் வாசமென் காற்றிடை
    வாழ்ந்திடச் சுவை காணும்

No comments:

Post a Comment