Sunday 12 May 2013

வேல்முருகா வேளையிதோ?


நீள் மகுடம் ஏந்திதமிழ் நிலம்பிரித்தும் ஆண்ட இனம்
நேர் எதிராய்கீழ் கிடப்பதேனோ
ஆள்திறனும் ஆற்றலுடன் அரசுகொண்டு ஆண்டகுடி
அந்நியர்க்கு அடிமைகளாய் வாழ்வோ
தோள் வலித்த தீரமெழும் தீந்தமிழர் இனமழித்துத்
தூயகுலம் வாழ்வழித்த தீயர்
சூழ்நல் லூரில் வாழ்முருகா சுற்றித் தீவினைகள் ஆக்கும்
 சூரனைச் சம்ஹாரம் செய்ய வாநீ!

ஊழ்வினையோ ஈழமதில் உள்நுழையும் பாவியினம்,
ஊரழித்துக் காணிநிலம்கொள்ள
யாழெடுத்து மீட்டிடவோ யாரி்டம்கால் வீழ்வதுவோ
யாரிவர்கள் தொன்மை மறத்தீரர்
வாள் எடுத்துச் சொந்தஇன வாழ்வைவந் தழிப்பவனை
வீழ்த்தவென வேட்கை கொண்ட மன்னர்
தூள் கிளப்பும் நூறுகதை தொன்மைபெருங்காவியத்தில்
தேடி நாம் படித்த துண்மை யன்றோ

சேல்விழிகொள் மாதர்குலம் சீரழித்த காட்சியெலாம்
சேர்த்து வைத்து பார்த்த விதியேனோ
வேல் பிடித்த  வினையழிக்கும் வள்ளிமணம் கொண்டவனே
வெற்றி என்ப துன்சினத்தில் உண்டு
சூல்தரித்த பெருவயிறும் சுட்டொழிக்கும் கீழ்இனத்தர்
சொல்லிஒன்று சேர்ந்துநிற்கக் கண்டும்
பால்வடித்த வாயினரும் பாவையரும் தாயவரும்
பலிகொடுத்தும் ஒன்றுசேரல் விட்டோம்

உயிர்எடுத்துச் சிரிசிரித்தும் உண்மைதனைப் புதைத்தவராய்
உறுதிகொண்டு காணும் பகையங்கு
வயிறெரிந்த உலகமிது வயிரமென்னும் ஈரமற்ற
வாணிகத்து நேசங்களை காத்து
கயிறெறிந்து காலன்வரக் கட்டித்தொகை யென்றனுப்பக்
கடனுமுண்டோ எழுதி வைத்ததேது
உயிர்பறிக்க மாவுலகும்  இசைபடித்து ஆடுகையில்
எம்கடமை என்ன வந்து கூறு!

***********

No comments:

Post a Comment