Wednesday 29 May 2013

சூரிய கிரகணம் (உருவகக் கவிதை)


அந்தர வானொளி செங்கதிரோன் அன்று
அம்புலியின் முன்னே வந்தது - அது
சிந்தை குளிர்வண்ணச் தேன்மதியே இது
செய்யத் தகுமோ சொல் லென்றது
அந்தியிருள் கவிந்தான பின்னே நீயும்
அள்ளியென் பேரொளி பற்றியே - நிதம்
சிந்துவ தென்ஒளி சந்தன மாயதில்
சிந்தை மயங்கினர் மாந்தரே

மந்திரமோ கறைமேனி கண்டுமிந்த
மாந்தர் உனைப்புகழ்ந் தேற்றலும் - அவர்
எந்தனொளிப் பிரகாசம் தனைக் கண்டே
ஏனோ பழி சொல்லித் தூற்றலும்
விந்தையன்றோ நிலை வெண்ணிலவே இது
வேடிக்கை உந்தன் விளைவதே - அவர்
வெந்தன மேனி ஆ..வெய்யில் கொடுமைஎன்
றெந்தன் ஒளிவிட்டே ஓடுவர்

அந்தோ காண் ஆதவா என்னியல் மேனியும்
அத்தனைபொன்னெழில் கொண்டதாம் - ஆகா
உந்தன்ஒளி யேது வெம்மையன்றோ அதில்
உன்னத தண்மையெங் குள்ளது
நிந்தனை வீணுன தென்றநிலா சொல்லில்
நீலவிண்ணில் வெயில் சுட்டது - இது
சுந்தரம்தான் மதிகெட்டவளே கறை
சிந்தையிலும் உண்டாம் என்றது

தந்திரமாய் பிரகாசம்கொண்ட ஒளி
தன்னை எடுத்தது பொய்மையா - அல்ல
சொந்தமென பெருமிந்த உலகமும்
சொல்லும் வகைதனும் பொய்யிதா
சிந்தை மயங்கிட செந்தமிழர் உன்னைச்
சின்னவள் என்னரும் காதலி - அவள்
பிந்தியவள் இளந்தங்கை நிலாவெனப்
பந்தமுடன் உனைக் கூறுவர்

மந்திரமோ என்னமாயமிட்டாய் இந்த
மண்ணிற் கவிஞான வல்லவர் -தினம்
உந்தனுடல் பிறைகொண்டு நலிந்திட
உள்ளம் கலங்கி உருகுவர்
செந்தமிழில் பல பாஇயற்றி யுனைச்
சொந்தமெனக் கொண்டு பாடுவர் - என்ன
விந்தையிது நானு மெண்ணி வியந்தனன்
வெண்ணிலவே இதைவிட்டிடு

மந்த ஒளியெழும் சந்திரனில் மனம்
முற்றும் மனம் கோணி நின்றது - ஒளி
இந்தளவு திமிர் கொண்டவனை இங்கு
என்னசெய்வதென்று நின்றது
உந்தனுளம் இவள் கொண்ட நலிவெண்ணா
உன்மத்தம் கொண்டிங்கு வந்ததோ - இவள்
எந்த பணியென இட்ட இயற்கையின்
ஏவலைச் செய்பவள் என்றது

எந்தன்முன் தேடிநீ வந்தபொழுதினில்
அந்தோ புவியிருள் கொண்டது - இதோ
சந்தன மேனிமுன் உன்னொளிகெட்டது
சென்றுவிடு என்று சொன்னது
உந்தன் பிர காசம் சின்னவள் முன்னிலை
இல்லை யென்றாக்கிய அன்னையே - அவள்
வந்து என்மேனியில் பொன்னிறம் தந்தனள்
வாழி இயற்கைதாய் என்றது.

No comments:

Post a Comment