Wednesday 8 May 2013

தாய்மைத் துயரம்

உடலேன் உயிரேன் உணர்வேன் உலகேன்
உறவேன் சொல்சக்தி
கடலேன் கதிரேன் கனலேன் கனவாய்
காணின் இவைசக்தி
விடலேன் வயதின் விளையும் இளமை
வளமேன் எழில்வற்றி
கெடலேன் குருதி சீறிப் பாயும்
கொலையேன் சொல்சக்தி

விருந்தேன் அருந்தும் விதமேன் உணவும்
விளைவில் நஞ்சாக்கி
மருந்தேன் மகிழ்வேன் மனதில் பிணியாய்
மனிதர் பிணமாக்கி
தருந்தேன் கசந்தும் தந்தாய் ஏன் ஏன்
தவிப்பே மூச்சாக்கி
இருந்தேன் போனேன் இதுவோர் வாழ்வா
இழிவில் இழிவாக்கி

பெண்ணேன் பொன்போல் பொலிவேன் அழகேன்
பெரிதென் றுடலாக்கி
மண்ணேன் மண்ணை மாக்கள் ஆளும்
மடமை நிலையாக்கி
பெண்மை தாய்மை பருவம் காதல்
பிரமை உருவாக்கி
என்னே கயவர் இதனை சிதைக்கும்
இயல்பும் தந்தாய்நீ

கண்ணே காணாக்கடவுள் என்றே
கதறிக் கரம்கூப்பி
அன்னை குலமும் காப்பாய் அதுவே
அறமென் றிறைநோக்கி
முன்னே நின்றார் முழுதும் தமிழை
மொழியாய் பேச்சாக்கி
என்னேகேட்டும் இரங்கா தழியும்
இதுவா வரும்நீதி?

கருவில் தோன்றிக் கையில் தவழ்ந்து
காலால் உதைகொண்டு
உருகித் தவழ உள்ளம் பூத்து
உவகை பெரிதென்று
வருகின் றழகில் வாழ்த்தி மகளே
வருவா னிளவரசன்
தருவான் வாழ்வில் தயவும் வளமும்
தாய்மை கனவாக்கி

இகழக் கொலைஞர் அழகைச் சிதைக்க
அரிதோர் பூமாலை
அகலக் கிளையில் எகிறிப் பாயும்
இனத்தின் கரமீந்து
துகிலைக் கொடியாள் துஞ்சத் துவள
துடிப்பைப் படமாக்கி
நிகழும் கொடுமை நிகழ்வா உலகுக்
கின்னோர் கண்காட்சி ??

உலகம் இதுவேன் உண்மை உளதேன்
இறைமை உரிமை ஏன்
கலகம் செய்யும் குணமும் களவும்
காழ்ப்பும் இருளும் ஏன்
உலவும் பேய்கள் உயிரைக் குடிக்கும்
ஒநாய்க் கூட்டம் ஏன்
பலமும் பெரிதாய் தீயோர் ஆளும்
பிறள்வுக் கெது நீதி?

No comments:

Post a Comment