Thursday 30 May 2013

மயங்கும் புவி வாழ்வு ,


தேன்குடத்தை ஊற்றியதாய் தேகஉணர் வாக்கி மெல்லத்
தித்திக்கும் இன்பங்களைத் தந்ததுயார்
வான்விரித்த நீலப் பட்டு வந்து நிறை மேகந் தொடும்
வெண்ணிலவின் தண்ணொளியில் வேகுதுபார்
தானழியத் தாகம்கொண்டு தாவுமின மாகித் தொட்டு
தூங்குகிளைத் தோன்றலென அல்லுற்று  
ஊன் படர்ந்த தோலில் பட்டு உள்ளிரென்று நோவை வைத்து
இன்பமென்று வாழவிட்டு ஏய்த்ததுமேன்

மான் கிடந்து அம்புபட்டு மாவதையில்  நீரும்விட்டு
மென்விழிகள் சோரலென்று காணுவதாய்
ஏன்கிடந்தே அல்லல்பட்டு இல்லையென்ற துன்பப்பட்டு
எண்ணிலாத வேதனையும் கொள்ள வைத்தான்
நான் நடந்து பாதைவிட்டு நள்ளிரவில் தீபங்கொண்டு
நட்ட நடுக்காட்டில் வழி தேடுகின்றேன்
வான் நடுவில் சீ றலிட்டு வீழும்பெருந் தீயைவிட்டு
வந்தஇடம் ஏதறியா வாழுகிறேன்

மேலிருந்து ஆசைப்பட்டு மேனிசொல்ல மானம்கெட்டு
மீட்ட வந்த வீணை என்று பேரும்வைத்து
காலிருந்து உச்சிமட்டும் கண்டதென்ன காதல் சுட்டு
காயிலவம் பஞ்செனவே வான் பறக்க
வாலறந்த பட்டம்விட்டு  வானில் பெரும் துள்ளலிட்டு
வீழுமெழும் மேடுபள்ள வாழ்க்கைதனைப்
போலிதுவும் சொர்க்கமென்றும் பூசொரிந்த சோலையென்று
பாலையாகித் தீதழிக்கப் பேசுவதேன்

காலையிட்டுக் கைகள் தொட்டு காணுங் கண்கள் மாயமுற்று
காதலின்பின் ஆவதென்ன காலமெல்லாம்
ஆலையிட்ட செங்கரும்பாய் ஆக்கிவிட்டு  சாறிழந்து
அங்கமெங்கும் நோய் பிடித்துத் துன்பமுற்று
சூலையென நோவில்கெட்டு சுற்றமவர் பாசம்விட்டு
சொல்லமுன்பு போகுமிடம் முழுஇருட்டு
வேதனையை நீக்கிவிட வேண்டுமெனில் நாளும்தொட்டு
வேண்டியழு சக்தியிடம் வாயும்விட்டு

*+++++++++++

No comments:

Post a Comment