Sunday 12 May 2013

காதலெனும் சாவினிலே


மாலையிளங் காற்றணைந்து மேனிதொட நாணுகிறேன்
மன்னவனே ஏன் பிரிந்தாயோ
சோலைமலர் வாசமெழச் சேதி வரும் காலையெனச்
சிந்தைபகை கொள்ள நின்றாயோ
பாலைவன மாயுடலும் பால்நிலவில் தீயெழுந்து
பாவையெனில் தீங்கு செய்வதேன்
ஓலைபல நானெழுதி உத்தமரே தந்துமென்ன
ஊமை விழியாகி நிற்பதேன்

காலைஅலர் பூநிதமும் காண வண்டை ஏங்கியழும்
காற்றும்துணை தேடிஓடிடும்
மாலை நிலா தன்துணையை மௌனமுடன் தேடிவரும்
மாற்றமில்லை தேய்ந்துபோவதும்
மேலைக்கடல் நீர்த்திரைகள் மேனிசுருண் டோடிவரும்
மீண்டும் விழும் காண ஏங்கிடும்
தோலை எழில் பட்டிதமும் சுட்டெரிக்கும் நீபிரிந்தால்
தேவியெனைச் சா அணைத்திடும்

சோலைதனில் பூமலர்ந்தும் சூடமனம் நாடவில்லை
சோகமெழக் காணுகின்றேனே
சேலையிலே காற்றுமெனை சீண்டிவிடத் தொட்டிழுத்துச்
செய்வதுமென் கேலியும்தானே
நாலைக் குணம் கொண்டவளோ நாணமதை விட்டொழிந்து
நாளுமுனைத் தேடுகின்றேனே
வாலைமகள் வாய்திறந்து வாஎனவே பாடியுமென்
வாழ்விலிது காதலென் சாவோ?


No comments:

Post a Comment