Wednesday 29 May 2013

சினம் மேவ..!

சினங் கொண்டான் சிவனென்றே
- செந்தீயின் கண்கொண்டோன்
- சிறுமையென் றோதலாமோ
மனங்கொண்டோர் நிலைதன்னை
- மாசபையின் முன்றலிலே
- மொழிந்திடத் தவறென்பதோ
வனங்கொண்டோர் குணங்கொண்டு
- வாழ்வின்று போகுங்கால்
- வகைசொல்லப் பிழை என்பதோ
இனம்கண்டோர் சொற்பொருளும்
- இருப்பதெது பொய்யோ மெய்
- எடுத்ததை அலசல் நன்றோ

கரங்கொண்டான் மழுவேந்தி
- கையிலொரு வேல் சூலம்
- காண்பதும் கடவுளன்றோ
வரங்கொண்டே வாழவிடா
- வைகயத்து வதைசெய்வோர்
- வழிகாணச் சினந்தாரன்றோ
உரங்கொண்டே அடிமைத்தளை
- உடையென்றே எழுந்தவரும்
உள்ளத்தில் கொண்டார்சினமே
தரங்கொண்ட வாழ்வொன்றைத்
- தரணியிலே ஆக்கவெனத்
- தான் சினமுங் கொள்வாரன்றோ

இனங் கண்டு ஏற்பதுவோ
- இல்லையவை மெய்யென்று
- எடுத்துரைத்துப் பார்த்தபின்னர்
கனம் கொண்டதாயின் அக்
- கணம் கொண்டும் காற்றில்விடும்
- கருத்தற்ற தென்னில்விட்டும்
மனம் கொண்ட நெறிமுறைகள்
- மாற்றங்கள் தனையேற்று
- மாறிடுவோம் மாற்றிவைப்போம்
சினம்கொண்ட பொருள்கண்டு
- சீராக்கும் செயலாயின்
- சேர்ந்துநா முழைப்போம் வெல்வோம்

No comments:

Post a Comment