Tuesday 28 May 2013

காணல் பொய்யா?

கற்பனைக் கெட்டாத  தூரத்திலே - அந்தக்
காற்றின் வெளியிடைத் தோற்றத்திலே - இந்த
அற்பனை ஈந்த ஒளிப் பொருளை - நானும்
அல்லும் பகலுமாய் எண்ணுகிறேன் - ஒரு
சிற்பமோ செய்கலைச் சித்திரமோ - எமைச்
செய்தது  மண்சிலை கைப்பதமோ - இது
விற்றிடவோ போட் டுடைத்திடவோ - இந்த
வேதனைப் பாத்திரம் வேறெதுவோ

சுற்றிச் சுனையெங்கும்  நீர்த்தெறிப்பு - ஒளி
சுட்டெழுங் காலை யுயிர்த் துடிப்பு - அதை
பெற்ற வகையிலோர் கண்விழிப்பு - அது
பிம்பமோ விம்பமோ பிரமையதோ -அதோ
வற்றுங் குளநீரில் வான்முகிலை - காண
வைத்து மேகம் நீரில் வீழ்ந்ததென - அஞ்சும்
கற்பனையே வாழ்வென் றற்புதமாய் - வீசுங்
கல்லில் அழிந்திடக் காட்டிநின்றாள்

வெந்தழல் வீசிடுங் காற்றினிலே - தீயில்
வேகுமுடலின் வியர்வை கண்டு - குளிர்ச்
சந்தணம்பூசிய நேரங்களை - எண்ணிச்`
சற்றே சிரித்துள்ளம் நோகுகிறேன் - இது
செய்வதே இன்பம் என்ச்சிலிர்த்து - இந்த
சிற்றாடை மூடிய நோய்ப்பொதியை - உடல்
எந்தனெனக் கூறி யாடியதை - எண்ணி
ஏனோ மனங்கொண்டு புன்னகைத்தேன்

சொந்தமெனச் சொல்லி வந்தவர்கள் - இதில்
சுத்த  பொய்யென் றுண்மை சொன்னவராம்- அவர்
வந்தார் இருந்தனர் போனரென்று ஏனோ
வாழ்வை யுரைத்தனர் காரணமென் - ஒரு
நந்தவனம் மலர்ப் பொய்கையெழில் - அதில்
நாட்டிய மாடும்செந்  தாமரையும் - இவை
எந்தவகை வெறும் கற்பனையோ - இதை
எண்ணி விடையொன்றைத் தேடுகிறேன்

சந்திரன் பூத்திடும் வானத்திலே - ஒரு
சாய்ந்த மரக்கிளை ஓரத்திலே -  அந்தோ
வந்தவன் எய்மலர் அம்பு பட்டு - ஒரு
வண்ணமான்  கொண்டதோ மெய்த்துடிப்பு - இது
நொந்தே அழிந்திட வென்றறியா - அதை
நோக்கி இரங்கியுள் ஆசைப்பட்டு - அதில்
அந்தமின்றி அழைந்தின்பங் கொண்டு - இன்று
ஆடி தளர்ந்துண்மை தேடுகிறேன்

வந்தவழி யுந்தெரிய வில்லை - மேலே
வானமா பூமியா எந்தன் எல்லை - எழிற்
செந்தமிழ் பூசிய வீதியிலே - நானும்
செல்லும் வழியிருள் கொண்டநிலை - சுக
மந்த மாருதமோ வீசிநிற்க - ஒரு
மங்கல வாழ்வு மலர்வனத்தில் - என்ன
மந்திரமோ நடைகொண்டிருக்க - இந்த
மண்ணி லென்வேடமும் மாறியதென்

நீலநிறத்தொரு வானப்பட்டு - அதில்
நிற்குங் கோள்சூரியன் ஆனமுத்து - அங்கு
கோலமிட்ட மேகம் ஓடித்தொட்டு - ஒரு
கூனல் நிலவென்னும்  தங்கத் தட்டு - இன்னும்
மேலே நட்சத்திர வெள்ளிப் பொட்டு - ஊடே
மின்னல் மழையென வைத்துகொண்டு - அந்தக்
காலதேவ தையும் என்னசெய்தாள் - இவை
காணல் மெய்யோ வெறுங் கற்பனையோ

No comments:

Post a Comment