Wednesday 29 May 2013

ஆகலாமோ ?

பன்முகைத்துக் கட்டழிந்த
பொன்மலர்கள் மாலைநேரம் புன்னகைக்கலாம்
கன்னமிட்ட குங்குமத்தில்
காணுகின்ற வானமங்கு  புன்னகைக்கலாம்
தன்நிறத்தில் சூரியயன்நல்
தங்கமென்று மாறி அங்கு புன்னகைக்கலாம்
நன்மனத்தில் எண்ணம்மாறி
இன்னலுற்றபோது தெய்வம் புன்னகைப்பதோ

முன்கழுத்தில் தொங்கும்அந்தப்
பொன்னகைகள் மின்னிமின்னிப் புன்னகைக்கலாம்
சின்னலைகள் ஓடுமங்கு
துள்ளும் மீனின் நீர் தெறித்துப்  புன்னகைக்கலாம்
தென்னை ஓலை மீதுகைகள்
தென்றல்கொண்டு தொட்டதாலும் புன்னகைக்கலாம்
நன்னெறிக்கென் றான  உள்ளம்
நாசம் செய்யும்போது  வாழ்வும் புன்னகைப்பதோ

கண்ணில் காணும் காட்சியாவும்
பொய்யென்றோதும் ஞானிஉள்ளம் புன்னகைக்கலாம்
மண்ணில் எங்கும் காணும்வாழ்வு
மாயை என்று கூறின் யாரும் புன்னகைக்கலாம்
வண்ணம் கொண்டமேனி பூசி
வாசமிட்டபோதும் எண்ணம் புன்னகைக்கலாம்
உண்மைகூறும் நெஞ்சம்கண்டு
ஒன்றுமில்லை சூன்யம் என்று புன்னகைப்பதோ

***********************

No comments:

Post a Comment