Thursday 30 May 2013

எதை இழந்தோம் ?

பொன்னிழந்தோம் பொருளிழந்தோம்
- பூவையரின் தூய்மைகெடப்
- பொட்டிழந்தோம் பொங்குதமிழ் வாழ்வும்
தன்நிலையைத் தன்மானம்
- தாற்பரியம் தலைமையுடன்
- தலைமேற்பொன்  முடியிழந்து நின்றோம்
என்னபயன் எடுத்ததாளும்
- இதயத்தே துணிவிருந்தும்
- ஏய்ப்பவர்கள் காட்டியநீள் விரலில்
தொன்மை தொடர் தீரர்திடம்
- கொண்டதெனத் தோளிருந்தும்
- துன்பமதைக் கொண்டலைந்து தோற்றோம்

கண்ணிழந்தோம் காலிழந்தோம்
- கயமையுந்தன் தலைவிரிக்கக்
- கன்னியரும் காளையரு மிழந்தோம்
மண்ணிழந்தோம் மானமுடை
- மகனோடு மகளெனவே
- மனையாட்டி, மாசற்றோர் நிலமும்
எண்ணிழந்த தொகையிலெதை
- இழந்தோமென் றறியாமல்
- எல்லாமே விட்டவராய் நின்றோம்
விண்ணெழுந்த தெய்வமுடன்
- வருமென்றே எண்ணிவரும்
- விடையிழந்து வறுமைகொண் டுழன்றோம்

மண்ணிருந்து மழலையென
- மாதாவின் மடிதூங்கி
- மகிழ்வுடனே தமிழ்க் கதைகள் பேசி
வெண்ணிலவில் விளையாடி
- விடுகதைகள் பலகூறி
- வீடென்று கோபுரமாய் கொண்டு
தண்மைதரும் பனிபெய்ய 
- தகிப்பெழுந்து வெயில்காயத்
- தாவாரத்தே தூறல்மழை கொட்ட
கண்ணிரண்டு கண்டுமனம்
- களிகொண்ட நாளெல்லாம்
- காற்றோடு போனதடா இன்றோ

பெண்ணுமழப் பிள்ளையழப்
- பிணம்புரளப் பேச்சின்றி
- பார்த்தழுது வாழுமொரு வாழ்வும்
எண்ணமெலாம் என்னுயிரும்
- இருப்பதுவோ போய்விடுமோ
- எடுத்தநடை விண்ணுலகோ என்று
கண்வழியக் காதடைக்கக்
- கடையும்வயி றூடுபசி
- காற்றில்வரும் சங்கொலியோ கேட்க
அண்ணளவில் ஆவிவிட்டே
- ஆகவொரு நடைப்பிணமாய்
- அன்னை தமிழ்தேச மிங்குநின்றோம்

பொன் வேண்டாம் பொருள்வேண்டாம்
- போனநிலம் வேண்டுமதைப்
- பிறன்கரத்தி லிருந்தெடுக்க வேண்டும்
என்வேண்டாம் என்றாலும்
- இறைமைதனைக் கொண்டவொரு
- இடம்வேண்டும் எனதுரிமை வேண்டும்
மன்னர்களின் மாளிகையும்
- மணிமண்ட பம்அயலில்
- மலர்க்காவும் குளிர்ச்சுனையும் வேண்டாம்
அன்புடனே அரவணைக்கும்
- அன்னையர்க்கும் பிள்ளைகட்கும்   
 ஆனந்த வாழ்வமைதி வேண்டும்

No comments:

Post a Comment