Monday 27 May 2013

சக்தியவள் கோலம்

வெந்தெரியும் சுடுகாடெம் வீடு - அங்கு
விளையாடும் ஆவிகள்நம் சொந்தம்
செந்தணல்தீ எங்களது மூலம் -  அதில்
சேரவிடா மண்பிடித்த தேகம்
கந்தைதனும் அற்றதொரு காயம் அது
காற்றடைத்தே ஊதிவிட்ட மாயம்
சிந்தைஆசை மந்திரங்கள் ஓதும் அது
செய்வதென்ன ஒன்றுமில்லைப் பாவம்

அண்டவெளி அன்னையவள் தேசம் - காணும்
ஆதவன்கள் சக்தியினோர் பாகம்
கண்கள் பகல் காண்பதெலாம் கனவு - இருள்
காணுகையில் கற்பனையின் வரவு
எண்ணங்களோ  மின்னுகின்ற விண்மீன் - அதற்
கேற்றவகை ஆக்குமெங்கள் மண்ணின்
வண்ணமெழ நாமமைக்கும் வாழ்வு - செயல்
வந்தளவை நிர்ணயிக்கும் வீழ்வு

மண்டபங்கள் மணிமகுடம் மஞ்சம் - இவை
மட்டுல்லக் கொண்டதெலாம் சுழியம்
கண்டபடி ஆடுவதும்கனவும் - எங்கள்
காலமதைக் கணக்கெழுதக் காணும்
தண்டமெனத் தாயளிக்கும் நோயும் - நாம்
 தாங்கிய இவ் வாழ்வும்  சிறை யாகும்
கொண்ட உயிர் வான்வெளிக்குப் போகும் - பின்
கூடுவதென் மாஒளியின் மூலம்

தங்கநிலா வீசுமொளித் தண்மை - அதை
தாங்கிமனம் பொங்கியெழுந் தன்மை
மங்கிவரும் மாலையிருள் அச்சம் -துயில்
மற்றவரின் மெய்கலக்கும்  இச்சை
கங்கையெனப் பொங்கி வடிந்தோடும் - பின்
காணுமுயிர்ச் சேர்க்கை புதுரத்தம்
இங்கிவைகள் யாவும் சக்தி யாக்கம் - இதில்
ஏதெனவோர் இயலபறியாத்  தூக்கம்

இங்கிருந்து செல்லுமிடம் நித்தியம் - அதில்
இணைவதுவே முடிவுகாணும் சத்தியம்
பங்கெனவே நிலம்பிரித்த வாழ்வும் - கொள்ள
பாரில் அதைப் பறித்தெடுக்கும் யாவும்
இங்கெமையே ஒட்டிநிற்கும் காந்தம் - அது
இல்லையெனில் வீழ்ந்திடுவோம் வானம்
பொங்குமெழில் இயற்கையுங் கொள் பாசம் - காந்தப்
பிடிப்பைவிட மனிதகுலம் சூனியம்.

No comments:

Post a Comment