Thursday 23 May 2013

பொறுமைக்கும் எல்லை! உண்டு!

போதும் பொறுத்தது பொங்காய் - இந்தப்
பூமி சுழல்கின்ற பாதையை மாற்றாய்
ஓதுமே சாத்தானும் வேதம் அதை
உண்மையென்று நம்பி ஓடாதே பக்கம்
தீதும் இனித்திடக் காணும் - அதை
தின்ற பின்பே வலி கொள்ளும் உதரம்
யாதும் பெரும் நிழலாகும் - இந்த
ஞாலம் ஒளிபெற்றும் உள்ளிருள் காணும்

கட்டியே காலுடன் கையும் - சுட்டுக்
காட்டிய தேகங்க ளெத்தனை கண்டோம்
மெட்டி அணிந்திட்ட மாதர் - உடல்
மீது குதித்திடும் பேய்களும் கண்டோம்
கொட்டிக் குடித்துக் கூத்தாடி - அவர்
கொச்சைமொழி கொண்டு நம்மவர் காட்டி
திட்டித் தமிழினம் சாய்க்க - நாமும்
திக்கெட்டு மோடித் திசைபல கொண்டோம்

அத்தனை தேசங்கள் யாவும் - அன்பில்
அத்தை நான் மாமனென் றண்டையில் வந்தார்
கத்திக் கதறி யழுதோம் - அவர்
காப்பது போற்பல வேடங்கள் கொண்டார்
பொத்திப் பிடித்திட வெள்ளம் - அது
பிய்த்துக் கொண்டோடிடும் நம்மவர்நெஞ்சோ
உத்தமம் தானென்ற போதும் - இன்னும்
எத்தனைநாள் பெட்டிப் பாம்பென வாழ்வும்!

சத்திய மேமுடி வாகும் - இது
சாத்தியமோ எமைக் கொன்றொழித் தாலும்
வித்தாய் முளைத்தெழும் மண்ணில் - இது
வெட்டி யழித்திட வேர்புதி தாகும்
எத்திசை போயிருந் தாலும் - நாமும்
ஈழமெனும் அன்னை தேசத்தின்பிள்ளை
வைத்த அன்புமனம் கூடும் - எமை
வாரி பிடித்துமண் வைத்துக் கொண்டோடும்

எத்தனை பேச்சுக்கள் கண்டோம் அவை
அத்திப் பழமென சொத்தைகள்தானோ
கத்தி சொருகிட வந்தோர் - பலர்
கட்டிய ணைத்துப்பின் காரியம் கொண்டார்
சொத்திக் கால் பச்சைமரத்தில் - ஏறிச்
சொர்க்கம்நடை கொள்ள உத்தியும் கூறி
வைத்தவர் வாழ்த்த நடந்தோம் வழி
வானமல்லக் கீழே பாதாளம் கண்டோம்

வைத்தியம் பார்த்திட வேண்டும் - தம்பி
வக்கிர உள்ளங்கள் வாதத்தை தீர்க்க
புத்தி கொண்டு திட்டம்போடு - கோடி
புண்ணியமுண்டு நீஒன்றாகக் கூடு
எத்திசைதா னிருண்டாலும் - காலை
ஏறும்சுடர் தன்னில் விண்ணொளி தோன்றும்
மொத்தம் விடிந்திட வேண்டும் - எங்கள்
முந்தைத் தமிழர்பொற் காலமே வேண்டும்

செந்தமிழ்ப் பாவெழவேண்டும் - பெண்கள்
சிந்துபடித் தின்ப நாட்டியம் செய்ய
வந்திருந்து குழலூதிச் - சிலர்
வாயசைத்தே தமிழ்க் காவியம்பாட
சந்தணமும் மலர் சோலை - தனில்
சார்ந்த மலர்மணம் வீசிடும் காற்றில்
சொந்த நிலம் என்றுஆடி - மக்கள்
சுந்தரமாய் விளையாடிட வேண்டும்

************************

No comments:

Post a Comment