Sunday 12 May 2013

கண்டதென்ன? !!


நீரைக் கண்டேன் நெருப்பைக் கண்டேன்’
நீந்தும் பூக்கள் நீரில் கண்டேன்
ஊரைக் கண்டேன் உறவைக் கண்டேன்
உறங்கும் விழியுள் இருளைக் கண்டேன்
நாரை கண்டேன் நாணல் புதருள்
நெளியும் பாம்பும் நில்லா துள்ளும்
தேரை கண்டேன் தமிழாம் அன்னை
தேசம் காக்கும் திறனைக் காணேன்

வானைக் கண்டேன் வானில் வில்லாய்
வண்ண ஏழும் வளையக் கண்டேன்
தேனை ஊற்றும் திங்கள் ஒளியும்
தேயும் வளரும் தன்மை கண்டேன்
பானை வயிற்றில் பலரைக் கண்டேன்
பாவை சிரிக்கும் அழகைக் கண்டேன்
ஏனோ எந்தன் இன்பத் தமிழ்மண்
இறைமை காக்கும் வழியைக் காணேன்

தேரைக் கண்டேன் தெய்வக் கோவில்
திகழும்தீபம் ஒளிரக் கண்டேன்
தாரை யாகக் கொட்டும் மழையும்
தரையில் நெளியும் நதியும் கண்டேன்
வேரைக் கொண்ட மரமும் கிளையில்
விளையும் கனிகள் தூங்கக் கண்டேன்
ஊரைக் காக்கும் தெய்வம் மட்டும்
உண்மை கொண்டே இரங்கக் காணேன்

வாழ்வைக் கண்டேன் வளமும் கண்டேன்
வாழும் மனிதர் சிரிக்கக் கண்டேன்
தாழ்வில் லாத்தலை முறையென் றங்கே
தளைத்தே ஓங்கும் தகமை கண்டேன்
வீழ்வே இல்லை வெற்றிக் களிப்பும்
வேற்றாம் மொழியில் கண்டேன் ஆயின்
ஆழ்ந்தே உறங்கும் அமைதிக் கணமும்
அன்னை மண்ணில் காணேன்! காணேன் !!

**************

No comments:

Post a Comment