Sunday 6 July 2014

கவிதை

கவிதை வெற்றுக் கவியென்றல்லக் காட்சிப் புலனின் நாதம்
கவிசொற் கூட்டம் அல்ல இதயக் கதவின் விரியும் ஓசை
கவிதை உள்ளத் தென்றல் நீவும் கரங்கள் மீட்டும் வீணை
கவிதை குயிலின் கத்தும்ஓசை கற்பனைப் புரவிப் பயணம் 

கவிதை சொல்லக் கனமும் ஆறும் கவிதை உள்ளத் தென்றல்
கவிதை இன்பக் குறுகுறு சலனம் காட்டாற் றின்வீழ் சத்தம்
கவிதை குளநீர்ச் சலனம் காதற் பெண்டிர் கண்நேர் வீச்சாம்
கவிதை உள்ளத் திமிறல் துள்ளும் கன்றின் மனஉற் சாகம்

கவிதை ஜல்ஜல் ஆடும் பெண்ணின் காலின் சதங்கை நாதம்  
கவிதை காற்றின் குளிர்மென் தடவல் காலைப் புலர்வின் கீதம்
கவிதை காட்டின் குவிமென் மலரில் கள்ளாம் இனிமை கொள்ளும்
கவிதை கனியை கொந்தும் கிளியின் கலகல ஓசைச் சத்தம்

கவிதை நாட்டின் வீரம் காணும்,கயமை நீக்கும் தீரம்
கவிதை காதல் உள்ளத் துளைசெய் காமன் கைவில் லம்பாம்
கவிதை சொல்லக் குழந்தை மார்பில் காணும் இன்பத் தூக்கம்
கவிதை நிலவின் பால்வெண் ஒளியாம் கற்பனை வானின் விண்மீன்

கவிதை உள்ளக் கூச்சல் கத்தும் கடிதென் துன்பக் கதறல்
கவிதை மனதின் ஓலம் துயரில் காணும் உயிரின் அச்சம்
கவிதை மரணக் கைகள் தீண்டக் காலன் கைமணியோசை
கவிதை மீண்டும் உயிரின் பிறப்பிற் காணும் சிசுவின் அழுகை

கவிதை கோவில் நெடுவான் உயரக் காணும் மணியின் ஓசை
கவிதை ஆற்றின் ஓட்டம் வீழும் காட்டாற்றின் சோ ஓசை
கவிதை மனதை ஈர்க்கும் காந்தம் கவிதை ஆழ்ந்தோர் மௌனம்
கவிதை ஞானச் செம்மை யூட்டம் கற்பனை காண்விண் ணோட்டம்

கவிதை காற்றின் வருடல் கண்ணில் ஊறும் இன்பத் தூறல்`
கவிதை மாயத் தொலைவான் ஆழம் காணாத் தோற்றும் மின்னல்
கவிதை வண்ணத் துகளின் வீச்சு காலத் தின்பேர் விருட்சம்
கவிதை வானக் கருமை மேகம் காணும் இடியின் சத்தம்

கவிதை தண்மைச் சுனைநீர் அலையின் சலனம் சிலிர்க்கும் ஓசை
கவிதை நோய்தீர் ஔடதம் உள்ளச் சோர்வை நீக்கும் குடிநீர்
கவிதை வளரும் செடியின் தளிராம் காணும் மென்மை வடிவம்
கவிதை உள்ளம் என்றும் பிள்ளை கையில் கொள்வாய் பொம்மை

No comments:

Post a Comment