Wednesday 2 July 2014

சக்தியே வாழ்வு கொடு

வானாக்கி  வானத்தை வில்லாக்கி விண்மீது 
வடிவாக்கி விசைகோள்கள்  உருவாக்கினாள்
தீநாக்கின் தீரம்கொள்  செழிவாக்கி  தீப் பந்தாய்  
தினம்காணும் சூரியன் உருவாக்கினாள்
தானாக்கி செய்வெப்பம் தணிவாக்கி இரவென்னும்
தன்மைக்கும் விளைவாக்கி தருமம் செய்தாள்
ஏனாக்கி இன்பத்தை இகம்மீது துன்பத்தை 
இரண்டாக்கி வைத்தும்பின் இன்னல் தந்தாள் 

தேனாக்கி தேன்கொள்ள மலராக்கி மலர்வண்ணம்
திகழ்கின்ற இதழாக்கி எழிலாக்கினாள்
பூநக்கி ஏனாக்கிப் போயுண்ணப் பசியீந்து புதிராக்கிப்
பூநொந்தும் உதிரச் செய்தாள்
ஊனாக்கி ஊன்வாழ உயிராக்கி உயிர்கொல்ல  
உண்மைக்கும் எதிராக்கி ஓரினத்தை
ஏனாக்கி விட்டாள் நல்  லினிமைக்குத் தமிழாக்கி  
இதயத்தைக் கொல்கின்ற  இழிவாக்கினாள்

மானாக்கித் துள்ளென்றும் மகிழ்வாக்கிக் கண்மீது 
மருள்கின்ற மென்மைக்கு வித்திட்டவள்
மேனாக்கி மேன்மைகொள் குலமாக்கி கொள்ளென்று
மதுவின்பத் தமிழ் சொல்லக் குடிசெய்தவள்
கூனாக்கிக் குனிகின்ற விதமாக்கி வீழென்று 
குழியாக்கிக் கொல்லென்று வகை செய்ததேன்
தீனாக்கித் தின்னென்றும் விலங்காக்கித் தமிழ்நங்கை 
திமிர்காம வெறியர்க்கோ  பலியாவதேன்

ஆணாக்கிப் பெண்ணாக்கி அவர்கொண்ட வாழ்வின்று
அடிமைக்கு நிகராக்கி அறங்கொல்லவும்
வீணாக்கிச் சிதையென்று வேட்கை கள் உருவாக்கி 
விளையாடும் விதிவெல்ல வழிவிட்டதேன்
காணாக்கி டந்தென்ன கண்மூடி கொண்டென்ன 
கரந்தூக்கி விழிகொட்டி கதறிக்கொண்டோம்
பேணாக்கீ ழ்விட்டெம்மை பிழையாக்கித் துவளென்று  
பூவாக்கிக்  குரங்கின்கை கொள்ளா காவாய்!

No comments:

Post a Comment