Wednesday 2 July 2014

விதியும் வாழ்வும்

நினைவெங்கும் துயர் தந்ததென்ன
நிலையெண்ணி ஏங்குதே உள்ளம் 
வினை செய்து உளம் நொந்ததென்ன
விலையற்றதோ வெறும் வாழ்வும்

நிலையெண்ணி ஏங்குதே உள்ளம் 
நெஞ்சத்தில் கீறிடும் காயம்
விலையற்றதோ வெறும் வாழ்வும் 
வெஞ்சினம் கொள்வதோ வீணும்

நெஞ்சத்தைக் கீறிடும் காயம் 
நிலையோடித் தொலைபோகுமின்பம்
வெஞ்சினம் கொள்வதோ வீணும்
வலையினுள் மீனன்றோ நானும்  

நிலையோடித் தொலைபோகும் இன்பம் 
தலைமேவிப் பாயுதோ வெள்ளம்
வலையினுள் மீனன்றோ நானும்  
வறுமைக்கு விலையாகிப் போகும் 

தலைமேவி பாயுமோர் வெள்ளம்
தருகின்ற துன்பங்கள் மிஞ்சும்
வறுமைக்கு விலையாகிப் போகும்
வருகின்றதோ எல்லை தானும்

தருகின்ற துன்பங்கள் மிஞ்சும் 
தண்ணீரில் மீன்விட்ட கண்ணீர் 
வருகின்றதோ எல்லை தானும்
வண்ணங்கள் தொலைகின்றதாகும்

தண்ணீரில் மீன்விட்ட கண்ணீர்  
தான் கண்டதோ தெய்வம் தானும்
வண்ணங்கள்  தொலைகின்றபோது
வான் வந்ததே ஏழுவண்ணம்

தான் கண்டதோ தெய்வந்தானும்
தந்ததே அன்பினை பக்கம்
வான் வந்ததோ ஏழுவண்ணம் கண்டு
வந்திடும் இன்பங்கள்மீண்டும்      

தந்ததே அன்பினைப் பக்கம்
தாகமும் கொண்டங்கு நிற்க 
வந்திடும் இன்பங்கள் மீண்டும்
வேகம் கொண்டே வீழ்த்தக் கண்டேன்

தாகமும் கொண்டங்கு நிற்க 
தவித்திட துன்பங்கள் சூழ்ந்தே
வேகம் கொண்டே வீழ்த்தக் கண்டேன்
வெடித்தே நல் உணர்வுகள்நோகும்

தவித்திட துன்பங்கள் சூழ்ந்தே
நினைவெங்கும் துயர் தந்ததென்ன
வெடித்தே  நல்லுணர்வுகள் நோகும்
வினை செய்து உளம் நொந்துப்போகும்

(மீண்டும்)
நினைவெங்கும் துயர் தந்ததென்ன
நிலையெண்ணி ஏங்குதே உள்ளம் 
வினை செய்து உளம் நொந்துபோகும்
விலையற்றதோ வெறும் வாழ்வும்

No comments:

Post a Comment