Wednesday 2 July 2014

சிவனே சீற்றமெங்கே! (2 ம் பகுதி)

மேவியெழும் கோபம் புயல் ஆகாதோ - இங்கு
மீண்டுமொரு தீயெழுந்து மூடதோ
நீதி நதி பெருக்கெடுத்தும் ஓடாதோ  - நீசர்
நித்திரையில் சாம்பலாக்கிப் பூசாயோ
கேவியழு தோர்குலமே சாகுதய்யா - இங்கு 
கூடிப்பல நாடுகளும் மோதுதய்யா
ஆவியெழுந் தோடும்தொகை கொஞ்சமல்ல - எம்
ஆயுள் எனும் தேவன்கொடை என்பதல்ல 

பாவிகளின் கைகளிலே பாவைர்கள் - படும்
பாடுதனை நீதி கொண்டு கேட்காயோ
ஆவிவிடும் காட்சிப் கண்டும் அம்பலத்தில் - நீ
ஆடும் நடம் பூமியதிர் வாக்கதோ
கூவியழக் குடலறுக்கும் மாவதைகள் - ஒரு
கொட்டுமிடி மின்னல் பட்டுத் தீராதோ
சேவித்துனைக் கேட்டுமினி என்னசெய்ய - நாம்
செய்பழிகள் கொண்டவரோ ஆவதென்ன

தேனினிய பேசுந்தமிழ் நாவுடையோர் - தமைத்
தேசங்களின் நீதிதுறை செய்வதென்ன
பூநிகர்த்த மாதர் உடல் தான்கிழித்தல் - அவை
புண்ணியமோ கண்ணிருந்தும் புண்களென
தானிதனைக் கொண்டதென நாம் நினைக்க இவர்
தத்துவமும் பேசிக் காலம் ஓட்டுவதேன்
வானில் கரும் மேகங்களின் மின்னல்இடி - அவை
வாக்களித்து  நீங்குமெனக் காப்பதென்ன

மயிலிறகே போடு எனப் பேசுகிறார் - ஒரு
மந்திரத்தில் மாங்கனியைத் தேடுகிறார்
பயிலும்நடம் பாதமுடைத் தாடுவென - நாம் 
பார்த்திருக்கக் காதுகளில் ஓதுகிறார்
நாயின்வளை வால்நிமிர்த்தப் பாடுபட்டார் - அயல்
நாடியந்தப் பேயிரங்க ஆசைப்பட்டார்
கோயிலிலே தெய்வமெனக் கூப்பியகை - பின்
கோபுரத்தை ஏனிடிக்கக் கூடுகிறார்

மோதவரும் மாடு தனை முன்னிருத்தி - உன்
மோதும் செயல் தீதெனவே மெய்யுரைத்தால்
சேதமிட எண்ணும் மனம் மாறிடுமோ -  ஒரு
சீர்திருத்த வாதம் அதை வென்றிடுமோ
நாதமிடும் நா பலதும் பேசுமய்யா - விட்டு 
நாம் பிழைக்க ஏதுவழி சொல்லுமய்யா
போதுமினிப் பொறுத்த கதை மூடிவைத்தே  - உன்
புத்திகொண்டே ஓர்வழியைக் காட்டுமய்யா

No comments:

Post a Comment