Wednesday 2 July 2014

சிவனே, சீற்றமெங்கே?

ஆலயங்கள் எங்கும் மணி கேட்காதோ -அங்
ஆண்டவனே நீயெழுந்து வாராயோ
காலமகள் ஓர்வழியும் காட்டாளோ -நம்
கைவிலங்கும் தானுடைந்து வீழாதோ
கோலமென்ன குற்றுயிரும் சாவாமோ 
கூறுந்தமிழ்க் குலமழிந்து போவதுவோ
ஆலமதை உண்டுயிர்கள் காத்தவனே 
ஆலயத்தில் நாமழுதும் நீதியெங்கே

தாவி நடந்த தோடும் எழிற் பூமியில்நாம் 
தங்குவதில் ஏன் நியதி மாறியதோ
மேவியுயிர் காவியுடல் வாழ்வுபொய்யோ 
மேனிய்யிழந் தேஎங்கிநிற்குஆவியதோஓ- எமைப்
பார்த்தவர்கள் கொல்லும் விதி ஒன்றாமோ
சேவித் துனைக் கையெடுத்ததுக் கூப்பிநின்றோம் - நாம் 
செய்வினைகள் யாவும் பகை கொள்வதென்ன

வேலவனை ஈன்றவனே வேடமென்ன - உன்
வீறுசுடர் தீவிழியும் மூடலென்ன
பாலமுதத் தேன்நிலவை உன்சடையில் - ஓர் 
பாவமெனச் சூடியுயிர் காத்தவனே
நாலதெனக் கொண்டகுண நங்கையவர் - இற்றை
நாளில் மலர்த்தேக உடை தானுரித்து
மூலவிதி மானுடத்தின் நேர்மையினை - அவர்
மீறி மிகக் கேவலங்கள் செய்கையிலே

வேலதனைக் கொண்டவனைப் ஈந்தவனே - பக்கம்
வீறெழுந்த மாதின் அரை கொண்டவனே
சூலமுடன்  தேவியயல் சேர்ந்தவராய் - நின்று 
சுற்றுமுற்றும் பார்ப்பதென்ன வேகமிட்டு
மாலவனைக் காத்தருளக் கூறாயோ - மங்கை
மானங் காக்கச் சேலையீந்த மாதவனும்
கோலமெங்கள் பூவையரின் மேனிதனை விழி
கொண்டுமருள் செய்தலின்றி நிற்பதென்ன

மேலமுதத் தீந்தமிழும் சீரழியும் - நாட்டில் 
மீண்டும் எங்கள் கண்ணகிகள் சாபமிட
சீலமுடை சிலம்பபொடிந்த ஓசைகளும் - கொண்ட
சீற்றம் பெருந் தேசமதைத்  தீய்க்காதோ
பாலமுதத் தெய்வமகன் பார்த்தழவும் அன்னை
பார்வதியும் பாலளித்து தூக்கியவர்
வீலெனவே கத்துமிளம் பாலகர்கள் - பகை
வீசியெறிந் தாடுகையில் காப்பாரோ

No comments:

Post a Comment