Sunday 6 July 2014

கண்ணீர்

நீரோடும் நிலவோடும் நின்றேவெண் முகிலோடும்
  நெஞ்சத்தில் எண்ணமோடும்
தேரோடும் தென்றலது திக்கெட்டும் பரந்தோடும்
  தேடியிரு கண்கள் ஓடும்
பாரோடும் பாரினிடை பன்நிலங்க ளைந்தினிலும்
  பலரோடிச் சென்றேவாழும்
வேரோடும் உறவுதனும் விளையாடும் விதியதுவும்
  வேடிக்கையாகும் வாழ்வும்

ஏரோடும் வயல்கூடி எதிரோடும் காற்றோடு
 எழுகின்ற இன்பம் யாவும்
பேரோடு புகழ்வாழ்வுப் பெருச்செல்வ வாழ்வினிலே
   பிறையாகத் தேய்ந்தே போகும்
சேறோடும் மண்ணோடும் உழுதோடிப் பின்னாலே
   சேர்ந்துறவோ டுண்டே வாழும்
நோயோடிப் போகின்ற நிம்மதிகொள் வாழ்வுதனை
   நினைந்தே யென்நெஞ்ச மேங்கும்

யாரோடிக் கேட்டாலும் விதியோடிச் செய்கின்ற
   விளையாட்டு வேறென்றாகும்
நீர்கூடி எழுகின்ற நீளஅலை போல்வந்து
    நிற்பதெல்லாம் அள்ளிப்போகும்
வேரோடு புயல்வீச விழுகின்ற மரமாக
   வீழ்த்திநம துறவைக் கொல்லும்
பேயாடி நடமாடிப் பிறக்கின்ற அழிவாகப்
  பேசாதுயிர் கிள்ளிப்போகும்

நானோடி நடக்கின்ற நல்லதொரு பாதைதனில்
     நாலுபேர்கள் தூக்கியே ஒடும்
நாளோடி வரும்வரையும் நானாடி நடந்துசெலும்
  நாளதுவே இன்பம் ஆகும்
பாவோடும் பாஎண்ணும் மனதோடும் வாழுவது
  பலமான உணர்வே கொள்ளும்
பாலோடு  பனியோடு பார்வைதனைக் கொள்ளுவது
   பாவி இவன் உளமேயாகும்

மேலோடும் மதியோட முகிலோடி மறைத்துவிட
    மெல்லவரும் காற்றும் ஓடும்
சேலோடும் நீர்ச்சுனையில் சேற்றோடு தாமரையாள்
  திகழ்ந்தாலுந் தூய்மைகாணும்
வேலோடு விளையாடும் வேல்முருகன் தமிழோடு
  விளையாடி நாளும்போகும்
காலோட முடியாது காடோடும் உடல்காணும்
   காலமே உண்மை யாகும்

No comments:

Post a Comment