Sunday 6 July 2014

கற்பனை என்னும் மாயை

கற்பனை என்றொருகோட்டை  - அங்கு
   கால காலமாக வேட்டை 
கொற்றவனாய் தினம் கூடும் - அந்தக் 
   கோல அரண்மனை மாடம்
பற்றுடனே பணியாற்றும் - பல
  பாவைகளின் எண்ணக் கோலம்
வற்றும் நிலை யற்ற பொய்கை அது
  வந்து சுற்றிக்காணும் வண்ணம்,

பொற்சுடர் மின்னி விளங்கும் - அதில் 
  பொய்களின் இராச்சியம் ஓங்கும்
விற்பனை மொத்த அறிவாம் - அங்கு
  வீரிட்டழும் உண்மை தானும்
கற்குகை யாகினும் வாழும் - உள்ளம்
  காணும் அரண்மனை வாசம்
புற்தரையிற் பனி மேவும்  - அங்கு
   போதையின் நித்திரை காணும்

கண்கள் கூசும் ஒளிவெள்ளம் - அங்கு 
  காற்றில் மிதக்கும் நல்வாசம்
கொண்டவர் மேனி சிலிர்க்கும் - மனம்
   கொஞ்சிக் களித்திடு மின்பம்
வெண்ணிறப் பூக்கள் மலரும் - வந்து 
   வீழ்ந்தநட் சத்திரம் மின்னும்
எண்ணம் கிறங்கித் தவிக்கும் - அது
   எங்கெல் லாமோ சென்று மீளும்

செண்டில் மலர் வண்டு ஆடும் - பக்கம் 
  சித்திரங்கள் நின்று பேசும்
தண்டினில் ஆடுந்தா மரைகள் - மன
   தாகமெழுங் கதிர்க் கண்கள்
மண்டல மெங்கணும் யாவும் - உன்
  மாண்பு தனைப்பேசிப் போற்றும்
கண்டதெல்லாம் கையிற் கொள்ளும் - அந்தக் 
  கற்பனை சாத்தியமாகும்

தாவும் மரம் தொங்கியோடும் - அது
  தானு மெந்தன் மனமாகும்
தூவும் அடைமழை கூடும் - அது 
  சொட்டும் நீரையல்லப் பூவும்
நீவி அலைத் தென்றல் சுட்டும் சில 
  நீல மலர்கெட்டு வீழும்
நாவிலிசை உயிர் கொள்ளும் அதில்
  நர்த்தன மாடிடும் உள்ளம்

பேயின் கூச்ச லிடும் சத்தம் - அது
   பிய்த்து வீசும் மன அச்சம்
நாயின்ஓ வென் றொரு ஓலம் - அந்த
   நாழி கத்தும் இருட்கோட்டான்
தேயும் நிலவுடை  தோற்றம் - கணம்
   தேகம் உறைகின்ற கூச்சல்
மாயும் எண்ணங்களில் மாற்றம் - உடன்
   மானிட வாழ்வின் மரணம்

தேவைகளின் வெறும் சூன்யம் - இனி
  தேனில்லை வாடும்மென் பூக்கள்
சாவை அணைத்திடும் கண்ணில் - அது
   சஞ்சல மற்றதோர் தூக்கம்
தேவியின் கூடும் தீவாசம் - மனம்
   தீங்கில்லா என்றிடக் காணும்
ஓ,விளை யாட்டிவை யாவும் என் 
    உள்ளத்தின் கற்பனையாகும்.

No comments:

Post a Comment